
மென்காற்றின் ஏகாந்தமாய் முதல் பத்தியும், சாட்டை சொடுக்கின் விதிர்ப்பாய் இரண்டாம் பத்தியும் இருப்பதை அ.முத்துலிங்கத்தின் பெரும்பாலான சிறுகதைகளில் கவனித்து இருக்கலாம்.
எழுத்தாளர் ஒருவரின் மனைவியின் அழைப்பின் பேரில், விருந்துக்கு செல்வதும், அவர்களை தங்கள் வீட்டுக்கு விருந்துக்கு அழைப்பதும் தான் கதை.
விருந்து உண்கையில், நடக்கும் சுவாரஸ்ய உரையாடல்களும், விருந்துக்கு அழைத்த யூதப் பெண்மணி ஓராவின் அம்மா விருந்து மேஜையில் அடுக்கி வைத்து இருக்கும் பலவகை பதார்த்தங்களையும். எதனால் அவ்வாறு செய்து இருக்கிறார் என்பதை மையமாக கொண்ட சிறுகதை.
இரண்டாம் உலகப்போரின் சமயம் கிரீஸ் நாட்டின் சலோனிக்கா(Thessaloniki) நகரத்துக்குள் ஜெர்மானிய படைகள் நுழைந்த நாளில் இருந்து திசைமாறும் வாழ்க்கைய சிரிப்பினூடாக விவரிக்கிறார் ஓராவின் அம்மா.
சலோனிக்காவில் பசியோடு அலைந்தபோது, கையில் கிடைத்த புளிக்க வைத்த அப்பத்தை உண்ண மறுத்த காரணத்தை (யூதக் காலண்டரின் படி ”பாஸோவர்” என்ற நோன்பு இருக்க வேண்டிய 7 நாட்கள்) விளக்குவது
படகில் தப்பித்து, பாலஸ்தீனத்தில் தஞ்சமடைந்து, ”கிப்புட்ஸ்” என்னும் புது வாழ்வுமுறைக்குள் இணைத்துக்கொள்வது.
ஒரு வேளை உணவுக்கு தவித்த சூழலில் இருந்து, அறுபத்து மூவர் அடங்கிய குழுவுக்கு உணவு தயாரிக்கும் சேவையை ஏற்பது.
பாலஸ்தீன பிரிவு, இஸ்ரேல் பிரகடனம், சிதறிகிடந்த குடும்பத்தின் ஒரு பகுதி ஒன்று சேருதல் என மையத்தில் வந்து சேரும் பல சரடுகளாக கிளைச் சம்பவங்கள்.
யூத வீட்டு புளித்த வைத்த அப்பத்தை உண்டு முடித்து, தங்கள் வீட்டுக்கு தோசை விருந்துக்கு அழைக்கையில், 3400 வருடங்களுக்கு முன்பாக எகிப்தில் அடிமைகளாக இருந்த யூதர்கள் நினைவாக ”பாஸோவர்” நோன்பை கடைபிடிக்க வேண்டி தாங்கள் அச்சமயம் விருந்துக்கு வர இயலாதென்பதை ஓராவின் அம்மா விவரிக்கும் தருணம்.
வருடத்திற்கு ஒருமுறை சிறந்த சிறுகதை ஒன்றைத் தேர்வுசெய்து ஆயிரம் பிரதிகளை மிகக் குறைந்த விலையில் நவீன இலக்கிய பரிச்சயமற்ற பொதுவான வாசகர்களை சென்று சேரும் வகையில், 2026 – சென்னை புத்தக் கண்காட்சியை ஒட்டி வான்கோ பதிப்பகம் இந்த கதையை (அ.மு வின் அனுமதி பெற்று) சிறப்பு பிரதியாக பத்து ரூபாய் விலையில் வெளியிட்டுள்ளார்கள்.