ஆறும்-ரெண்டும்-ஒண்ணும்

புதன் இரவு 1 மணிக்கு அலுவலக மெய்சிகர் சந்திப்பு ஒன்றுக்காக காத்திருக்கையில், 2026 சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகங்களில் இருந்து ஒரு கையில் எடுக்கமுடிந்தவைகளை மேலோட்டமாக எடுத்ததில் வந்தவை ஒன்பது.

எட்டில் ஆறு சிறுகதை தொகுதி. ஒரு (பெரு)நாவல், ஒரு குறு நாவல் மற்றும் ஒரு கட்டுரை தொகுதி.

ஆறு சிறுகதை தொகுதிகளிலும் இருந்த தலா ஒரு கதையும், இரு நாவல்கள் மற்றும் கட்டுரை தொகுதியில் இருந்து சில பக்கங்களையும் படிக்க முடிவு செய்து, ரெண்டே முக்காலுக்கு அருகில் முடித்தாகிவிட்டது.

சுற்றிவரும் துணைகோள்கள் கணக்காய் , மூளை முழுதும் பட்டாம்பூச்சிகள்.. இருந்தாலும் நன்றாகத்தான் இருந்தது…

திருச்செந்தாழையின் ”அப்பா” சிறுகதை : மீதமிருக்கும் மோர்சாதத்தினை உறிஞ்சும் அப்பாவும், அவரது நிறமிழந்த கைகடிகாரமும் சொல்லாமல் சொல்லும் கதை.

தெய்வீகனின் ”கார்த்திகை” சிறுகதை : யாழ்பாணத்து கஸ்தூரியார் வீதியும், அங்குள்ள நதியா நகைக்கடையையும் மையமாக கொண்ட கதை. அனைத்துக்கும் மேலாக அங்கு தினசரி தரிசனத்துக்கு வரும் கார்த்திகையும்.

ஜா.தீபாவின் ”மறைமுகம்” சிறுகதை : உடல் குளிர்த்த மகவை மடியில் கிடத்தி,காண வராத கணவனை எண்ணியபடி இருக்கும் மனைவியை மையமாய் கொண்ட கதை.

தேவிலிங்கத்தின் ”மேனகா ஜால்ரா கொலுசு” : ஒத்தைக் கால் கொலுசு ஒன்றை தொலைத்த பெண்ணிற்க்கும், கண்டெடுத்த குடும்பத்தையும், கொலுசு முத்துக்களாய் கோர்க்கும் கதை.

கவிதா சொர்ணவல்லியின் ”ஒரு க்ளாஸ் விஸ்கி” : “நாம ரொம்ப ஐடியலன ஃபேமிலிதானேம்மா?” என்று ஒரு சந்தோச தருணத்தில் கேட்கும் மகன், வாழ்வியல் மாற்றங்களை மெதுவாய் உள்வாங்கி, விரிசலின் நுனியை சரிசெய்ய முயலும் அப்பாவையும், காதலை அம்மாவிடம் சொல்லுவதற்கு அப்பாவை கேட்டுக்கொள்ளும் மகளையும் மையமாய் கொண்ட கதை.

வண்ணதாசனின் “குத்துக் கல்” : வெளிச்சம்,வெக்கை,குளிர்ச்சி என எல்லாமே போதும் போதுமென தோன்ற வைக்கும் சூழல் ஒன்றில், மூத்தார்குரிச்சிக்கான பயணக்கும் சுந்தரம் அத்தானை மையமென கொண்ட கதை.

பி.கே.பழனிக்குமாரின் “தொழில் செ[ய்]ய விரும்பு!” : கொரொனா காலத்துக்கு பிறகான காலை நடை ஒன்றில், எதிர்படும் எழுபது வயது நபரின் சொல்லும் “என்ன பழனிக்குமார் இப்படி லாக் பண்ணிட்டாங்களே…?” என்னும் வாக்கியம் “தொழில் செய்ய விரும்பென மாறியதை விவரிக்கும் முதல் அத்தியாயம்.

வாசு முருகவேலின் “மணிபல்லவம்” : ஆறு மணிக்கு அணைக்கப்பட காத்திருக்கும் மின்சாரமும், மரண ஊர்வலம் ஒன்றை கறகறத்த காட்சிகளாய் காட்டிக் கொண்டு இருக்கும் ரூபவாகினியும், சோம்பலை கொஞ்சமாய் நகர்த்தி வைக்க முயற்சிக்கும் ஷோபாவுமாய், தீபகற்பத்தின் அருகிலான தீவில், கடலில் கலந்திருக்கும் அனைவரின் செந்நீருக்கும் சமர்ப்பணம் செய்யப்பட்டு இருக்கும் நாவல்.

கார்ல் மார்க்ஸின் “பீச்” : “கும்மோணத்து காலம்பற மாதிரி இல்லயே…” என்று நினைத்தபடி தியாகராஜ நகர் பேருந்து நிறுத்தத்தில் செந்திலின் வருகைக்காக காத்திருக்கும் சந்தியாவில் தொடங்கும் முதல் அத்தியாயம்..

  • யோகேஸ்வரன் ராமநாதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *