நிஜமென நிலைகொண்ட பெருஞ்செயல்கள் – யோகேஸ்வரன் ராமநாதன் | எழுத்தாளர் ஜெயமோகன்

சில நாட்களுக்கு முன்பு சென்னை வாணி மஹாலில் ஒரு பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்வு. நாயகி, தவில் கலைஞர் பத்மஸ்ரீ அரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேல் அவர்களின் பேத்தி. நிகழ்வு முடிந்தவுடன் அலுவல உயர்நிலை நிர்வாகிகள் கூட்டம் ஒன்றிற்காக மும்பை பயணம்.அலுவலக சந்திப்புகள் முடிந்து தங்குமிடம் திரும்பியதும், பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்வு குறித்து நினைவில் இருந்த தகவல்களை கொண்டு கட்டுரை ஒன்றை எழுத ஆரம்பித்தேன்.
நிகழ்வில் குறிப்புகள் எடுக்க வில்லை, ஆனால் நிகழ்வின் ஆரம்பம் முதல் முடிவு வரை கோர்வையாக மனதில் கொண்டு வந்து எழுத முடிந்தது. பரத அபிநயங்களை, அசைவுகளாக பார்ப்பதில் இருந்து ஹஸ்தங்களாக பார்க்க வைத்தது நண்பர் ஜெயக்குமாரின் ஆலயக்கலை வகுப்புகள்.நாதஸ்வர-தவிலிசை குடும்பத்தில் இருந்து வந்தவன் எனினும், லய விவகாரங்களை மேலும் மேம்படுத்திக் கொள்ள உதவியது ஜெயக்குமாரின் கர்நாடக இசை அறிமுக வகுப்புகள்.பரத நிகழ்வினை அதற்கான டெக்னிக்கல் சமாச்சாரங்களோடு எழுத வைத்தது இவ்விரு வகுப்புகள் அளித்த உத்வேகம்.
குறிப்புகள் இன்றி, நிகழ்வை கண்முன் நிறுத்தி, கட்டுரையாக[சுழன்றாடிய தபஸ்யா… கண்ணுக்கும் காதுக்கும் கிடைத்த விருந்து!] எழுத முடிந்தது நீங்கள் பயிற்றுவிக்கும் தத்துவ வகுப்புகள்.முழுமையறிவு வகுப்புகளை ஆரம்பிப்பதற்கு முன்பாக உங்கள் மனதில் பல சிந்தனைகள் எழுந்து இருக்கும். அதன் செயல் விளைவுகளை கண்முன் பார்க்கையில் ஆசிரியரென நீங்கள் அடையும் பெருமிதத்தை உணர்கிறேன். டிசம்பர் மாத விஷ்ணுபுரம் விருதுவிழா , ஆகஸ்ட் மாத பெரியாசாமி தூரன் விருதுவிழா உள்ளிட்ட சில வாரங்கள் தவிர வருடத்தின் எல்லா வார இறுதியிலும் வெள்ளிமலையில் நடைபெறும் முழுமையறிவு வகுப்புகளின் மூலம் பயன்பெற்றவர்கள் ஏராளம்.
வாழும் தமிழ்” நியூயார்க் இலக்கிய நிகழ்வுக்கான பாடல் உருவாகிய விதம் குறித்து அப்பாடலின் இசைஅமைப்பாளராகிய நண்பர் ராலே ராஜனுடன் பேசிக்கொண்டிருந்த போது, அப்பாடல் பதிவு குறித்து அதன் ஒளிப்பதிவாளர் சொல்லி இருந்த வரிகளை ராஜனிடம் சொல்லி மகிழ்ந்து கொண்டு இருந்தேன். Feel the Spark, நெருப்பை உணர்தல்- ராஜன் | எழுத்தாளர் ஜெயமோகன்
அ) : அமெரிக்கா- நியூயார்க்கில் வாழும் தமிழ் மாநாடு : LIVING TAMIL LITERATURE FESTIVAL | எழுத்தாளர் ஜெயமோகன்
ஆ) : லண்டனில் ”திரு” பதிப்பகம் தொடக்கம்
திரு பதிப்பகம், இரண்டு நூல்கள். | எழுத்தாளர் ஜெயமோகன்
இ) : உலக இலக்கியத்திலும் இந்திய இலக்கியத்திலும் சாதனைப் படைப்புக்காக (ஒரு கோடி பரிசுத் தொகை கொண்ட) ஆண்டுதோறும் வழங்கப்பட இருக்கும் விருது
இந்தியாவின் மிகப்பெரிய இலக்கிய விருது இனி நம்மிடமிருந்து! | எழுத்தாளர் ஜெயமோகன்
நியூயார்க் நிகழ்வும், லண்டன் பதிப்பக தொடக்கமும், உலகின் முதன்மை விருதும் பெருஞ்செயலெனும் கனவிலிருந்து நிஜமாக நிலைகொண்ட விசயங்களாக ஆகி உள்ளன. உங்கள் உள்ளம் அடுத்த பெருஞ்செயல்களை நோக்கிய சிந்தனைகளை ஆரம்பித்து இருக்கும்.
வாழும் தமிழ் பாடலின் ஒலிப்பதிவாளர் வானத்தை கைகாட்டி சொன்னது, “யாரோ எல்லாவற்றையும் மிகச்சரியாக இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார்கள்” ஆம்.,,வெள்ளிமலை நிலம் செம்மைப்படுத்தப்பட முதன்மை காரணங்களில் ஒன்றான ”கொரோனா ஊரடங்கு” முதல், உலக அளவில் அதிக பரிசுத்தொகை கொண்ட விருதை அறிவிக்க காரணங்களில் ஒன்றான ”வைரமுத்துவுக்கு ஞானபீட அறிவிப்பு” உட்பட,
“எல்லாவற்றையும் சரியாக இருக்கும்படி யாரோ பார்த்துக்கொள்கிறார்கள்”
– யோகேஸ்வரன் ராமநாதன்