ஆக்காண்டி – வாசு முருகவேல்

ஈழ நிலத்தின் கிழக்கு பகுதியில் கதை ஆரம்பமாகிறது.உயிரும், உதிரமும் பொருட்டாக மதிக்கப்படாத காலநிலை.பரஞ்சோதிக்கு இரு வாரிசுகள். “உங்கட மூத்தவன் புலியில தானே…?” என்ற கேள்விக்கு மகனும், மகளும் தன்னை பார்க்கையில், தன் மனிசி மனோன்மணி மூன்றாவதுக்கு ஓப்புக்கொள்ளவே இல்லை என்பதை நினைத்துப் பார்க்கும் பரஞ்சோதி.

அலைகழிப்புகளில், ஆலயங்களும், மசூதிகளும், தேவாலயங்களும் தீக்கிறையாக்கப்படுகின்றன.

ஒருபோது வசந்தத்தை கடந்து வந்திருக்கு வாய்ப்பில்லாத நஜீப்.. ஊர்காவல் படையின் சிறு பகுதிக்கு தலைமை தாங்க ஆரம்பித்து, இலங்கை பாதுகாப்புத் துறையின் உயர்மட்ட கூட்டங்களில் மூன்றாம் நாற்காலி பதிவு செய்யப்படும் நஜீப் ரஹ்மானாக மாறுவதில் தொடங்கி, நாவலின் முழுமைக்கும் தொடரும் மாற்றங்கள்.

அடுத்த பொங்கலுக்கு, அடுத்த தீபாவளிக்கு என தனக்கெனெ எடுத்து வைத்த புது சாரத்தை கட்டுவதை தள்ளிப்போட்டுக் கொண்டே இருக்கும் பரஞ்சோதி, அப்பாவுடைய சாரத்தை(கைலியை-லுங்கியை), தெரியாமல் கட்டி மகிழும் மகள். தனக்கு தெரிந்த அந்த ரகசியத்தை அப்பாவுக்கு தெரியாமல் ராணுவ ரகசியம் போல பாதுகாக்கும் மகன்.

சின்னஞ்சிறு சந்தோச தருணங்களை கொண்டாடி மகிழும் பிள்ளைகள் இருவரையும் பரஞ்சோதி பிரிய நேரிடுகிறது. அப்பாவின் சாரத்தை தங்கை கட்டிமகிழ்ந்த சில நாட்களில், செம்மண் பூமியில் ஆடையின்றி நடந்துசெல்லும் தங்கையை பார்க்க நேரிடுகிறது.

இராணுவத்தால் துரத்திச் செல்லப்படும் ஆட்டுமந்தை ஒன்றிற்கும், அடைக்கலம் வேண்டி காளிக் கோயிலில் அண்டியிருக்கும் மனித கூட்டத்திற்கும் பெரிய வேறுபாடு பாவிக்கப்படுவதில்லை.

ஒரு புறம் வெள்ளை விரிப்புகள் மேல் வெள்ளை அட்டைகள் வைக்கப்பட்டு சிறு துளி தேநீரும் சிந்தாமல், உயர்மட்ட கூட்டங்களில் பரிமாறப்படும் தேநீர். ரத்தம் வழியும் சதையும் குவியல்கள் அம்பாரமாக குவிக்கப்படுவது மறுபுறம்.

பரஞ்சோதியின் மகன் தாசனும், உடன் அகிலனும் எதற்காக துரத்தப்படுகிறோம் என்பதே தெரியாமல் வேட்டையாடப்படுகிறார்கள்.துன்பியல் சம்பவம் என்று ஒருவரியில் நாம் கடக்க முற்படும் சம்பவங்களின் கோர்வை நாவல் முழுவதும் தொடர்கிறது

ஈழத்து இலக்கியவாதியான சண்முகம் சிவலிங்கம் நினைவாக, நாவலுக்கான தலைப்பை தேர்தெடுத்தது பற்றியும், நாவலுக்கு அத்தலைப்பு எப்படி கச்சிதமாக பொருந்தியது என்பது பற்றியும் முன்னுரையில் விவரித்துள்ளார் முருகவேல்.

கூடவே ”ஒரு படைப்பு முழுமையடைவது வாசகன் கண்டடையும் தரிசனங்களில்தான் இருக்கிறது” என்ற தனிப்பட்ட அபிப்ராயத்தையும் முன்வைக்கிறார்.

தப்பி வந்த தாசனும்,அகிலனும் கம்போடியாவில் நல்லதம்பி கணபதிப்பிள்ளையிடம் கேட்கும் கேள்வி முன்னுரை வரிகளை மீண்டும் படிக்க வைக்கும்.

– யோகேஸ்வரன் ராமநாதன்

***************************
ஆக்காண்டி
வாசு முருகவேல்
எதிர் வெளியீடு
விலை : 180 ரூ
***************************

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *