கலாதீபம் லொட்ஜ் – வாசு முருகவேல்.

கன்னட நடிகர் ராஜ்குமார், வீரப்பனின் பணயக்கைதியாக இருந்து வீடு திரும்பிய பின் எடுத்த பேட்டி என்று நினைவு. வீரப்பனின் கஸ்டடிக்குள் இருந்த ஆரம்ப நாட்களில் சிரமப்பட்டாலும், நாட்கள் செல்ல செல்ல அந்த சூழலுக்கு தான் ஒன்றிப்போனதையும், எப்போது வெளியேறுவோம் என்று நினைப்பிலிருந்து ஏன் வெளியேறனும் என்ற எண்ண ஓட்டத்தை அடைந்ததை பற்றி குறிப்பிட்டு இருப்பார்.

”கலாதீபம்” என்ற பெயரில் கொழுப்பில் இயங்கும் லாட்ஜ் ஒன்று கருவாட்டு மொத்த வியாபாரம் செய்யும் தமிழ் வியாபாரி ஒருவரால் நடத்தப்படுகிறது. இரவு பத்து மணிக்கு குளித்து பட்டையை போட்டு தன் தனி வாழ்க்கையை ஆரம்பிக்கும் லாட்ஜ் மேனேஜர். கருவாட்டுக் கடையில் இருந்து இரவு வந்ததும் குளிக்கச்செல்லும் சங்கர் அன் கோ.

கொழும்பன்ரி – வாரம் ஒரு முறை சிறையில் மகனை நேரில் காணும் வாய்ப்புக்காக வாரம் முழுமைக்கும் காத்திருக்கும் அம்மையார்.

கனடாவில் இருக்கும் மூத்த மகள் ஏற்பாடு செய்யும் வெளியேறல் பயணத்திற்காக நயினா தீவில் இருந்து, கலாதீபம் வந்து சேரும் விசாகப்பெருமாள், இளையமகள் தாரிணி, மகன் சந்திரன்.

தங்கியிருக்கும் நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக கன்னட நடிகர் ராஜ்குமாரின் மனநிலையை விசாகப்பெருமாள். தன்னுடைய படிப்பை தந்தை தற்காலிகமாக மறந்திருப்பதை ஒரு வித பதட்டத்துடன் கொண்டாடியபடி இருக்கும் சந்திரன்.

சைவ ஓட்டல் ஒன்றில் சந்திக்கும் பெண் ஒருவரை தொடர்ந்து நடக்கும் கிளைச் சம்பவங்கள் சங்கரை சிறையில் தள்ளுகிறது. சங்கர் கைதுக்காக, கருவாட்டுக் கடையும், கலாதீபமும் சூறையாடப்படுகிறது.

மகனை கான சிறைக்குச் செல்லும் கொழும்பன்ரியுடன், சங்கரின் தாயாரும் இணைகிறார். இருவருமாக சேர்ந்து இரு மகன்களுக்கும் இடியாப்பம் செய்கிறார்கள்…

விசாகர்(அ) விசாகப்பெருமாள் குடும்பத்துக்கான பயண ஏற்பாடுகள் படிப்படியாக நடக்கிறது. ராணுவ/காவல்துறை நபர்களின் நடவடிக்கையால் கலாதீபத்தின் கலகலப்பு குறைந்தபடி வருகிறது…

அ) : கலாதீபத்தின் மேனேஜர் பஞ்சவர்ணமும், முதலாளியும் எப்படி எதிர்கொள்கிறார்கள்..?
ஆ) : விசாகர் குடும்பத்துக்கு பொன்சர் என்ன ஆனது…?


“ஈழ இலக்கியத்தில் இதுவரை காலமும் பேசப்படாத ஒரு புதிய களமாக இந்த நாவல் இருக்கிறது.வடக்கு-கிழக்கில் இருந்து கொழும்பிற்குச் சென்று திரும்பி வருவதே பலபேருக்கு அச்சமாக இருந்த காலகட்டத்தை இந்த நாவல் தனது தளத்தில் தானறிந்தவற்றை அல்லது தான் பார்த்தவற்றை அதனதன் தன்மை கெடாமல் வாசகனிடம் சென்று சேர்க்குமென நம்புகிறேன்”.

வாசுவின் மேற்கண்ட முன்னுறையோடு ஆரம்பிக்கும் நாவல்

“வடக்கு-கிழக்கிலிருந்து வேலைக்காகச் சென்று கொழும்பில் உதிரியாக வாழும் தமிழர்களின் வாழ்வை பேசுகிறது. வாசு முருகவேலின் மொழியில் கொழும்பைக் காணநேரும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது..” என்ற அகரமுதல்வனின் பின்னட்டை குறிப்போடு நாவல் நிறைவைடைகிறது.

– யோகேஸ்வரன் ராமநாதன்

**************************************
கலாதீபம் லொட்ஜ்
வாசு முருகவேல்
கிழக்கு பதிப்பகம்
விலை : ரூ.180
**************************************




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *