
அந்தி சாயும் நேரத்தின் மேல் ஆசிரியருக்கு என்ன மயக்கமோ தெரியவில்லை, பிற்பகலின் நிறைவையும், இரவின் ஆரம்பத்தையும் கைக்கொள்ளும் அந்த மெல்லிய கோடு, பெரும்பாலான கதைகளில் வெவ்வேறு சொற்களில் விவரணைகளாக இடம்பிடித்துவிடுகிறது.
தனது கண் முன்னே, இருள் பனியை போல படர்ந்து நிறைத்ததைப் பார்த்துக்கொண்டே சாய்ந்திருந்தார் சட்டநாதன். காஃபியின் சுவை நாக்கில் மிச்சமிருந்தது. பித்தளை கூஜாவில் இருந்த தண்ணீரை எடுத்து ஒரு வாய் குடித்தார். இன்னொரு மடக்கு எடுத்து கொஞ்ச நேரம் வாயிலேயே வைத்திருந்து விட்டு பிறகு மெல்ல விழுங்கினார்.
“நிழல்” சிறுகதையில் வரும் வரிகள். கதாப்பாத்திரங்கள் ஊடாடும் நிலப்பரப்பை, வாழ்வியலை கதைகளில் கொண்டுவருகையில் கவனமாக கையாள வேண்டிய விசயங்கள் சில உண்டு.
”ராக்கெட் தாதா” தொகுப்பில் இடப்பெற்றுள்ள “படுகை” சிறுகதை பிரபு மத்தியாஸால் “Accused” என்ற பெயரில் குறும்படமாக எடுக்கப்பட்ட பின்புலத்தை, அக்கதையில் வரும் படுகை, கொள்ளிடப்பகுதி, தஞ்சை நிலவியல் போன்றவற்றை தென்மாவட்டத்து ஆள் படத்தில் கொண்டு வருவதன் சவாலை முகநூல் பதிவொன்றில் விவரித்திருப்பார்.
”அண்டவெட்ட அறப்பருவாளோடு போன கதையாயிரு..” உதாரணத்துக்கு இந்த வாக்கியம். முதல் இரண்டு சொற்கள் பிடிபட விவசாய பின்புல வாழ்வியலோ, அது சார்ந்த அடிப்படை புரிதலோ தேவைப்படுகிறதல்லவா…
மிஸ்டர் கார்ல், மேப்படி வார்த்தையை நான் காய்ன் பண்ணுனது ஜஸ்ட் நவ்… காப்பி ரைட்ஸ் பிரச்சினையின்றி, நீர் பயன்படுத்திக் கொள்ளலாம் 🙂
பதினொறு கதைகளில், ராக்கெட் தாதா,படுகை,சுமித்ரா கதைகள் குறித்தான தனது அவதானிப்பை அளந்த சொற்களில் பின்னைட்டையில் சொல்லி இருக்கிறார் நாஞ்சில் நாடன்.
”நிழல்” சிறுகதையின், உப பாத்திரமாக அறிமுகமாகி பிரதான பாத்திரங்களில் ஒன்றாக மாறும் சந்திரா
சடுதியில் நடந்துமுடிந்த கோரம் ஒன்றையொட்டி, தேநீரும், குடிதண்ணீரும் இயல்பாய் புழங்கும் “சுமை”
டாஸ்மாக்கின் ஸ்டிக்கரின் பளபளப்பில் குடிமகன்களின் வாழ்முறையை, ஒருவரியில் சொல்லிச் செல்லும் “கிறக்கம்”
”கற்படிகள்” – ”நிலங்கள் குறைந்து அப்பா இறந்து சொத்துக்கள் பிரிந்து இதோ இந்த கேட்டை பிடித்துக் கொண்டு நிற்கும் இப்போது கூட ஒன்று மட்டும் ஆழமாக, மிக ஆழமாக உயிர்ப்புடன் இருந்துகொண்டே இருக்கிறது”.
”ஒருவித வேட்கை,புற சாதனைகளை அற்பத்தனம் என்று வரையறுத்துவிடுகிற,அதில் பிரமிப்பு கொள்ளாத ஒரு வித விலக்கம். ஆனால் வயது கூடக் கூட அதில் ஊசலாட்டம் கூடுகிறது.ஏதோ ஒன்றை வாழ்வு மறுபரிசீலனை செய்யச் சொல்கிறது. கொஞ்சம் நெகிழ்ந்து கொடு என்கிறது. அடங்கிப் போயேன் என்கிறது…”
சமவயது சிறுவர்கள், இளைஞர்களாகி, விவசாயமும்,பேங்க் வேளையுமாய் இருதிசையில் பிரிய, யார் யாரை உதவிக்காக சந்திக்க செல்கிறார்கள் என்பதை நம்மால் சுலபமாக யூகிக்க முடியும். வாசல் கேட்டுக்கு வெளியில் காலணியை உதிர்த்து, கையில் அளிக்கப்படும் பச்சரிசி நிறம்பிய மஞ்சள் பை கையளிக்கப்படும்வரை, கதையில் வரும் விவரணைகள், அகப்பயணம் ஒன்றை, நிச்சயம் ஆரம்பித்து வைக்கும்.
மூன்று வருடங்களில் மொத்தம் பதினொரு கதைகள் மட்டுமே எழுதியிருப்பதற்காக அதிருப்தியடைய வேண்டுமா அல்லது எழுதமுடிந்ததற்காக ஆசுவாசம் கொள்ள வேண்டுமா என்ற சந்தேகத்தையும்,கூடவே, எல்லா கதைகளையும், எவ்வித புற அழுத்தங்களுக்கும் ஆட்படாமல், பொறுமையாக தன்னளவில் ரசித்தே எழுதியிருப்பதை தன்னுரையில் குறிப்பிடுகிறார் ஆசிரியர்.
மனைவி கொடுத்த காஃப்பியை குடித்துவிட்டு திண்ணையில் உட்கார்ந்து, பின்னந்தி இருள் தவழத் துவங்கியிருக்கும் வீதியை பார்த்தபடி திண்ணையில் சாயும் “நிழல்” சட்டநாதனும்
முப்பத்திரெண்டு வருஷ அயலக வாழ்வையும், மூன்று தலைமுறை குடும்ப உறுப்பினர்களையும் , நுண்விவரணைகள் மூலம் இருபது பக்கங்களில் கண்முன் நிறுத்தும் இந்த தொகுப்பின் பிரதான கதையான மையப்பாத்திரமான “ராக்கெட் தாதா” தாவூதும்
பெரிய வெள்ளைபுள்ளிகள் கொண்ட சிகப்பு பெட்டை நாய் ஒன்று மடிகள் குலுங்க குலுங்க அவரை கடந்து நீண்ட தெருவில் கிழக்கிலுருந்து மேற்காக ஓடுவதை பார்த்துக் கொண்டு நிற்கும் “கற்படிகள்” ராமமூர்த்தியும்
பதினோறு கதைகளிலும் அங்கங்கே வரவிக் கிடக்கும் புங்கமர கிளைகளும், ஒதியன் போத்துக்களும்… வெத்தலை சீவலும், கார்ல் மார்க்ஸை சில கணங்களேனும் நினைக்க வைக்கும்.
*************************************
ராக்கெட் தாதா
ஜி.கார்ல் மார்க்ஸ்
எதிர் வெளியீடு
விலை : ரூ.250
*************************************