
இரண்டடுக்கு மொழிபெயர்ப்புகளை தாண்டி கைக்கு வரும் கதைப்புத்தகம் எவ்வாறு இருக்கவேண்டும்?
சுழன்றடிக்கும் சொல்லாடல்களும், வித்வத்தைக் பிரஸ்தாபிக்கும் இடைச்செறுகல்கள் இல்லாமலும்,மூலப்பிரதிக்கு அணுக்கமானதாகவும் வரக்கூடிய மொழிபெயர்ப்புகள், தனித்துவம் பெரும்.
துருக்கி மொழியில் இருந்து டெனிஸ் வெப்பரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட ஆய்ஷே ஓவ்யூரின் “காசா பாட்டர்” நாவலை தமிழில் மொழிபெயர்திருக்கிறார் காயத்ரி.
ரைமண்டோ என்ற கட்டிடக் கலை நிபுணர் இரு போர்வைகள் செய்ய ஆசைப்படுகிறார். வெறுமனே போர்வைக்கு ஆசைப்பட்டு இருந்தால் இந்த புத்தகம் வந்திருக்காது. போர்வையில் பெண் முகம் ஒன்றை வரைய, அதனை செய்பவரிடமே வேண்டுகிறார். அந்த முகம் தான் வடிவமைக்க இருக்கும் “காசா பாட்டர்” என்ற கட்டிடத்தின் முகப்பில் வைக்க வேண்டி இந்த பூர்வாங்க முன்னெடுப்பு.
ஒட்டோமான் சுல்தான் இரண்டாம் அப்துல் அமீதின் அழைப்பின் பேரில், தேசியக் கண்காட்டி ஒன்றை வடிவமைப்பதற்காக, இத்தாலியில் இருந்து இஸ்தான்புல் வந்திறங்கும் ரைமண்டோ, பூகம்பத்தால் சீர்குலைந்த கட்டிடங்களை புதுப்பிக்கப் பணிக்கப்படுகிறார்.
வந்த வேலையை செய்யாமல், ”காசா பாட்டர்” கட்டிடத்தை எதற்காக நிர்மாணம் செய்கிறார். கட்டிடம் கட்டப்படும் முந்தைய நூற்றாண்டு சம்பவங்கள் ஒரு முனையாகவும், அங்கு தங்கி இருக்கும் கதைமாந்தர்களின் வாழ்வியல் சம்பவங்கள் மற்றொரு முனையாகவும், ஆய்ஷே ஓவ்யூரால் அழகான போர்வையாக பின்னப்பட்டுள்ள நாவல்.
மொழிபெயர்ப்பு நூல்களுக்கு தேர்தெடுக்கப்படும் வார்த்தைகள் பல சமயங்களில் அயற்சியை உண்டு செய்பவை.
“படுக்கலாம் என்று எழுந்திருக்கும்போது… “ என்று ஆரம்பித்து பா.ராகவன் வலைப்பக்கத்தில் எழுதியிருப்பார். திரும்ப திரும்ப படிக்க வைத்த இரு வார்த்தைகள்.
”உடைந்த வெளிப்பூச்சு , எட்டிப்பாக்கும் செங்கல்”
இந்நகரத்துக்கென்று தனித்துவமான தாளமும் பாணியும் இருக்கிறது. இந்தக் கட்டிடத்தின் அடித்தளம் ஒரு நூற்றாண்டுகளுக்கு முன்பே போடப்பட்டது. இயற்கையின் பரந்த பரப்பில் தன்னை இழப்பதைத் தவிர்க்க ஒரு மனிதனுக்கு இடம் தேவைப்பட்டது. பைத்தியக்காரத்தனத்தைத் தவிர்க்க ஒருவருக்கு நேரம் தேவைப்பட்டது. தானி யார் என்ற எண்ணங்களிலிருந்து தப்பிக்க,மற்றவர்களின் இருப்பு தேவைப்பட்டது. இந்த கிரகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு புகலிடம்… வீடு என்று அழைக்க ஒரு சரணாலயம் தேவைப்பட்டது.
டூனல் சதுக்கம். குறுக்கு சந்துகள், டிராம் பாதைகள் என,இஸ்தான்புலின் இஸ்திக்லால் தெருவில் இஸ்திரி கடை வைத்திருப்பவர் தெரிந்திருக்கும் தரவுகள் போல,பருவநிலை நிலக்காட்சிகள், வாழ்க்கை முறை,உரையாடல்கள், அகச்சித்தரிப்புகள் என நாவலின் முழுமைக்கும் பெரும்பாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகள் மூலம் ,மூலப்பிரதிக்கு அணுக்கமானதாக படைப்பாக மொழிபெயர்த்துள்ளார் காயத்ரி.
காயத்ரியின் சமீபத்திய பிரான்ஸ் பயணத்துக்கு முந்தைய உழைப்பா, அல்லது மொழிபெயர்ப்பு முடிந்த பிறகான இளைப்பாறல் பயணமா என்று அடுத்த முறை சந்திக்கையில் கேட்க வேண்டும்.
நாவலின் இரு மையப் பாத்திரங்கள். கான் யமனேர். ஹம்சா எசிலிர்மக்.
கான் – அறுவை சிகிச்சை நிபுணராக ஆகியிருக்க வேண்டியவர், மனோதத்துவ நிபுணராகி, தன்னுடைய சிக்கல்களுக்கும் சேர்த்து வழி தேடுபவர்.
ஹம்சா – தனது தாத்தா பாதுகாவலார் இருந்த காசா பாட்டர் கட்டிடத்தின் பாதுகாவலர்
கான் தனது பாட்டியின் நினைவாக பாட்டியுடைய லிமோஜ் பீங்கான் டப்பாவில் காப்பி பொடியை வைத்திருக்கிறார்.
தனது தாத்தா பாதுகாத்திருந்த பூஞ்சணம் பிடித்த பழைய பொருட்களை அதன் உரிமையாளர்கள் வந்து கேட்கக் கூடும் என்று பத்திரமாய் பாதுகாத்து வரும் ஹம்சா.
முதலாமவர் மனோதத்துவ நிபுணர். இரண்டாமவர் நிபுணரின் உதவி தேவைப்படக் கூடியவர்.
ஹம்சாவாக ஆவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் கொண்ட முந்தைய வாழ்க்கை டாக்டர் கான் யமனேருடையது
ஹன்ஸா பழைய பொருள்களில் வாழ்வதும், கான் பாட்டியின் பீங்கான் டப்பாவுக்கும் – நூலிழை தான் வித்தியாசம்.
நாவலின் உப பாத்திரமாய் ஆரம்பித்து, மையத்துக்கு அருகில் வரும் மற்றொரு கதாபாத்திரம் கானின் இளைய சகோதரர் கரீம்.
மற்றவர் அறியாதது என்று இருவரும் மனதில் பூட்டி வைத்திருக்கும் ரகதியம் இருவருக்கிடையில் உடைபடும் உணர்வெழுச்சி தருணங்கள், நாவலின் முக்கியமான இடம்.
நாம் செய்திருக்க வேண்டியதெல்லாம் இந்த பொய்களின் வலையிலிருந்து ஒருவரையொருவர் விடுவித்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்
இருவரிதான் என்றாலும் இருவரின் வாழ்வு முழுமைக்கும் தொடர்ந்த அந்த மாயவலையே நாவலின் அடிநாதம்.
ஹம்சா தக்சிம் செல்லும் பேருந்துக்காக காத்திருந்தான். அவனைப் போலவே காயமடைந்திருந்த ஒரு வயதான பெண்மணி ஒரு தாழ்வான் ஸ்டூலில் அமர்ந்து தன் நடுங்கும் கைகலல் பலூன்களை விற்க முயன்றுகொண்டிருந்தார். ஒரு ஜிப்சி பெண் தனது பிளாஸ்டிக் பாத்திரத்தில் குவிக்கப்பட்ட மஞ்சள் பூக்களின் மகிமையை ஒவ்வொரு வழிப்போக்கருக்கும் சொல்லிக்கொண்டிருந்தாள்.
நாவலின் இறுதி பகுதியில் வரும் சித்தரிப்பு. மூன்று மனிதர்கள். வெவ்வேறான கவலைகள்,மகிழ்ச்சிகள்,தன்னிறைவுகள்
ஹம்சா எதற்காக அங்கு நின்றிருக்கிறான்..?
ரைமண்டோ எதற்காக இரு போர்வைகள் நெய்யச் சொன்னார்..?
நூல்கள் முன்னும் பின்னுமாய் இணைக்கப்பட்டு அழகிய போர்வையாய் உருமாறுவதைப் போல, காசா பாட்டர் கட்டிடம் உருவான கதையையும், தலைமுறைகள் கடந்து நிகழும் சம்பவங்களையும் இணைக்கும் நாவல்.
காயத்ரியின் மொழிபெயர்ப்பு முயற்சியில் முக்கியமான ஆக்கம்.
*********************************
காசா பாட்டர்
ஆய்ஷே ஓவ்யூர் (தமிழில் காயத்ரி.ஆர்)
ஸீரோ டிகிரி பதிப்பகம்
விலை : 320 ரூ
*********************************
– யோகேஸ்வரன் ராமநாதன்