விலகி நடக்கும் சொற்கள்-ஜி.கார்ல் மார்க்ஸ்

அம்மாசத்திரம் கடைத்தெருவில் பாதி இடிக்கப்பட்ட நிலையில் இருக்கும் கோவிலைத் தாண்டும்போதும், லாரி ஒன்றில் டாப்பில் படுத்து புகைத்தபடி, மைதானம் ஒன்றை நோட்டமிடும் டர்பன் வாலா புகைப்படத்தை பார்க்கும்போதும், கார்ல் ஞாபகம் வரும்.

இரு வாரம் முன்பான கும்மோணம் பயணம் ஒன்றில், அம்மாசத்திரம் தாண்டுகையில் வழக்கம்போல இவர் நினைவு வர, திடீர் சந்திப்பு…

வாழ்றான்யா மனுஷன்”னு சொல்லுவோம் இல்லியா.. அப்படியே சொல்லிக்கலாம்… ஆனால் இந்நிலையை அடைய அவர் கடந்த வலிகளும், வசனங்களும் அதிகம்… அனேக விசயங்களை “விலகி நடக்கும் சொற்கள்” கட்டுரை தொகுப்பில் விவரித்துள்ளார்.

கார்லுடைய ”தீம்புனல்” நாவல் வெளியீடு சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை காஸ்மோபாலிட்டன் கிளப்பில் நடைபெற்றது. அதில் சிறப்பித்தப்பின், அவ்வப்போது கவிக்கோவில் சந்திப்பது வாடிக்கை. குமரகுருபரன் விருது நிகழ்வில் (இந்தியாவில் இருக்கும் பட்சத்தில்) பின்வரிசை நாற்காலிகள் ஒன்றில் கண்டிப்பாக அமர்ந்திருப்பார்.

சமீபத்தில், ரமேஷ் பிரேதனின் இறுதி நிகழ்வில் பாண்டிச்சேரியில்..

அம்மாசத்திரம் தொடங்கி ஆக்கூர் வரை, பண்ணெண்டு கட்டுரைகளை படிக்க முடிந்தது(மொத்தம் இருபத்தெட்டு)

2019ல் முதல் பதிப்பு கண்ட புத்தகம், சமகால பிரச்சனைகளை அடிநாதமாக கொண்ட கட்டுரைகளும் உண்டு. “குற்றமும் தண்டனையும்” கட்டுரை, அப்போது குழந்தை பாலியல் வன்முறை மற்றும், தாயாரை கொலைசெய்த குற்றங்களுக்காக மரண தண்டனை பெற்ற வாலிபர் குறித்து “இந்த விவகாரத்தையொட்டி நமது சமூகத்தில் நிலவுகிற குற்றம் மற்றும் தண்டனைகள் மீதான நமது சாய்வுகள் மற்றும் முரண்கள் குறித்து ஆராய்வோம்” என்று ஆரம்பித்து விரிவான பார்வையை முன்வைத்திருக்கிறார். இந்த கட்டுரையை படித்துக் கொண்டிருக்கையில் தான் அதே வாலிபரின் மரண தண்டனை ரத்து மற்றும் விடுதலை குறித்த செய்திகளும் வந்து கொண்டு இருந்தன.

ஒரு தற்செயல் நிகழ்வுதான், எனினும் கட்டுரையின் கோணமும், விவரிக்கப்பட விசயங்கள் சிலவும் தற்போது நடந்திருப்பதை அறிகையில், அதுவும் கட்டுரையை படிக்கும் அன்றே அறிகையில் சிறிய திகைப்பு ஒன்றும் உருவாகிறது

”தரிசனமும் தரித்திரமும்”- கட்டுரை. நாள் ஒன்றுக்கு பத்து முதல் பதினாறு மணி நேரம் வாசிப்பதை பிரதானமாக வைத்திருந்த, வேலையில்லா கும்மோணத்து நாட்களில் தொடங்கி, நாள் ஒன்றுக்கு பன்னிரெண்டு மணி நேரம் உழைக்க நேரிடும் தற்போதைய அமீரக-அம்மாசத்திர வாழ்க்கை குறித்த கட்டுரை, கும்மோணம்-ஓசூர்-சென்னை- அமீரகம்-கும்மோணம் என்று சில வருடங்களின் ரோலர்-கோஸ்டர் வாழ்க்கையை நான்கு பக்கங்களில் விவரிக்கும் இந்த புத்தகத்தின் மிக முக்கியமான கட்டுரை.

வாழ்க்கையை எழுத்திலும் அவ்வாறே முன்வைக்கும் கார்ல்மாக்ஸ் மேலே குறிப்பிட்ட கட்டுரையை இப்படி முடிக்கிறார்.

“எனக்கு வேலை கஷ்டமாக இருக்கிறது என்று எப்பொழுதாவது புலம்பினால் அமைதியாக என் முகத்தை பார்க்கிறார்கள். பழைய அனுபவம் அவர்களை பீதியூட்டுகிறது, ஆனால் இப்போதும் என்னால் காசு இல்லாமல் பஸ் ஏறமுடியும் என்பதே என்னை வாழத்தூண்டுகிறது.”

***************************************
விலகி நடக்கும் சொற்கள்
ஜி.கார்ல் மார்க்ஸ்
எதிர் வெளியீடு
175 ரூ.
***************************************

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *