
நிகர்மொழி பதிப்பக அச்சகத்தில் அச்சடிக்க ஆரம்பித்ததும் அவசர கதியில் கொண்டு போய் சேர்ந்த்திருப்பார் போல…
இருபத்தியிரண்டு அத்தியாயங்கள் எழுதி மறுபடியும் சுணங்கி, கடைசி அத்தியாயங்களை முடித்து அச்சுக்கு சேர்ப்பித்த கதையை என்னுரையில் சுவாரஸ்யமாக படிக்கலாம்.
பயணமா – இன்பச் சுற்றுலாவா எந்த வகைமைக்குள் அடக்குவது என்பது குறித்து , எழுத்தாளர் அதிஷா, முந்தைய முத்தக வெளியீட்டு விழாவில் சொல்லி இருந்ததை, இந்த புத்தகத்துக்கும் வழிமொழிகிறார்.
”இப்பல்லாம் யாரு மேடம் பயண நூல்களை வாசிக்கிறாங்க” வாராந்திர பத்திரிக்கை ஆசிரியர்களால் அலுப்புடன் மறுக்கப்பட்டதையும் மறக்காமல் பதிவு செய்திருக்கிறார்.
எதுக்கும் இருக்கட்டும்னு பாஸ்போர்ட் எடுத்து வைத்துக் கொள்வது போல, வருட வருடம் வருசம் வெளிநாடு போறது முன்னபின்ன இருந்தாலும் ,அரசாங்க அலுவலங்களில் மல்லுகட்டி என்.ஓ.சி. எடுத்து வைத்துக் கொள்வதை அசராமல் செய்யும் அரசு மருத்துவர்.
தலைமை செயலகத்தில் துறை அமைச்சர் முன் நேரில் ஆஜராகும் கடைசி சாங்கியத்தை ஒவ்வொரு முறை நிறைவேற்றுகையில் நடக்கும் சம்பவங்களை வைத்து தனி புத்தகமே போடலாம்…
பயணத்தேதிக்கு ஐந்து நாட்களுக்கு முன்பாகவே என்.ஓ.சி அனுப்பி , அரசுதுறை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினாலும் , வியட்நாம் விசா, வேலையை காட்டியிருக்கிறது.
தொடர்ந்து புத்தகங்கள் வெளிவந்தபடி(?) இருக்க, நாம் ஏன் ஒரு புனைப்பெயர் வைத்துக்கொண்டு எழுதக்கூடாது என்று தீவிர யோசனையில் இருந்தவர், வியட்நாம் விசாவில் பெயர் மாறி வந்ததை, நற்சகுனமாய் எண்ணியதில் ஏற்பட்ட கடைசி நிமிட குளறுபடிகளை ரெண்டாம் அத்தியாயத்தில் அதகளமாய் விவரிக்கிறார்.
கூடுதல் சிறப்பாக, உடன் பயணித்த தோழி ஒருவரின் விசாவிக்கு அப்ளை செய்திருந்த தோழியின் கணவர், பாஸ்போர்ட் நம்பரை தவறாக உள்ளீடு செய்து வெற்றிகரமாகா விசாவும் வாங்கி வைத்திருந்தது.
சமீபத்திய பிரான்ஸ் பயணம் ஒன்றில் குடியுரிமை சோதனையில் பணியில் இருந்த அதிகாரி தன்னிடமிருந்த, பணத்தை (யூரோ தானே காயத்ரி?) வாங்கி எண்ணிப்பார்த்ததையும், வெளியேறிய பின் அதில் ஒரு நோட்டுகுறைந்ததை பற்றியும் எழுதி இருந்தார். சில முறை தொடரும் சம்பவமாக இருப்பதால் எழுதி இருப்பதையும் தெரிவித்திருந்த பதிவு அது…
அருணாவுக்கு சோதனை, இமிக்கிரேஷன் ஆபீசராக அன்று அமர்ந்திருக்கும் கிரைம் பிராஞ்ச் ஆபீஸர் மூலம் வந்திருக்கிறது… அசராமல் பேசி, கேட்டுக்கு அந்த பக்கம் செல்கிறார் அத்தியாயம் மூன்றில்.
உறுத்தல்கள்…?
எப்போதாவது, எழுதாமல், அத்தியாயத்துக்கு அத்தியாயம், இந்தியாவை-தமிழகத்தை-சென்னையை ஒப்பிட்டு எழுதியிருப்பது, சுவாரஸ்யத்தை மட்டுப்படுத்தும் விசயம்.இரண்டாம் பாதியில் ஒப்பீடுகளை ஒப்பீட்டளவில் குறைத்துக் கொண்டுள்ளார் எழுத்தாளர்.
அச்சிடப்பட்டு இருக்கும் இட்டாலிக் பாண்ட் ஒத்த வடிவத்தை பெற்றிருக்கும் பாண்ட். வாசிப்பனுபவத்தை நிச்சயம் குறைக்க செய்கிறது. சில பத்திகள், அல்லது சில பக்கங்கள் இட்டாலிக் பாண்டில் இருக்கலாம். ஆனால் ஒட்டு மொத்த புத்தகமும் அப்படி இருப்பது ஒரு நெருடலே.
மற்றொரு முக்கிய விசயம், அத்தியாங்கள் புது பக்கங்களில் ஆரம்பிக்காமை. புது பக்கம் ஒன்றி அரை வரிக்கு பிறகு ஆரம்பிக்கும் 22ம் அத்தியாயமும், அடுத்து ஒரு புது பக்கத்தில் இரு வரிகளுக்கு பிறகு ஆரம்பிக்கும் 23ம் அத்தியாயமும் நிச்சயம் கவனம் கொள்ள வேண்டியவை.
அடுத்த பத்திப்பில் ஆவன செய்வார் என நம்புவோம்..
சாப்பா மலைக்கிராமத்தில் மக்கும் மக்கா குப்பைகளை, மலைவாழ்மக்கள் யாருடைய நிர்பந்தமும் இன்றி அவர்களாக பிரித்து வைத்திருப்பதை விளக்கியபிறகு “பார்க்க படம்” என்று சொன்னாலும் படத்தை காணோம். மீண்டும் ஒரு முறை அட்டை டூ அட்டை பார்த்தாலும் காணோம்.. உடன் வந்த நான்கு தோழியரின் பெயர்களையும், படத்தையும் டைட்டில் கார்டு போல முன்னும் பின்னும் இணைத்திருக்கிறார்.
விடுதி அறைகளில் தங்காமல், வாடகை வீடுகளில் தங்குவது, சில தினங்களில் விட்டு வெளியேறுகையில் ஏற்படும் உணர்வு பிணைப்பு குறித்து அழகான வரிகள்…
ஒத்த மனநிலை கொண்ட தோழியரோடு பயணம் செல்கையில் கிடைக்கும் நிம்மதி, அசவுகரியங்களை பொருட்படுத்தாமை, பயணத்தின் முதன்மை நோக்கத்தை சிதைக்காத திடீர் முடிவுகள், அரட்டைகள்.
ஹனோய் ரயிலடி தெருவில், குறுகிய சந்தில் ரயில் செல்வதை பார்க்க போய் , கோல்ட் காப்பியும்,மேங்கோ ஸ்மூத்தியும் வலுக்கட்டாயமாக குடிக்க நேர்ந்ததை, நம்மூர் கோவில்களின் வாசலில், அர்ச்சனை கடை அட்ராசிட்டிகளோடு ஒப்பிட்டு எழுத மறந்துவிட்டார்.
படிநிலை விவசாயத்துக்கு பெயர்போன “சாப்பா” என்ற மலைவாசஸ்தலத்திற்கு பயணம் செய்து, இரவுணவு உண்டு, உறங்கி,காலை உணவிண்டபின் திரும்பும் (இரு பகல்- ஓர் இரவு என சுற்றுலா அமைப்பாளர்களால் அழைக்கப்படும்) இறுதி (இந்தியா திரும்புவதற்கு முன்பான) பயணம்.
இடுப்பில் கைக் குழந்தையோடு,ஆபரணங்களை விற்க முயற்சிக்கும் பெண்களையும், சுற்றுலா அமைப்பாளர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, தங்களின் தன்னிறைவு வாழ்வியலை, பணம் கொடுக்கும் வியாபாரமாக மாற்றிக் கொண்டு இன்ஸ்டாகிராமில் இன்புற்றிருக்கும் பெண்மணி குறித்தும், கல்வியின் பின்புலம் அளிக்கும் சவுகரியத்தை பற்றி பேசும் இருபத்தி மூன்றாம் அத்தியாயம் புத்தகத்தின் முக்கியமானது
இரண்டாம் பாதியில் வேகமெடுக்கிறது புத்தகம். அங்கில் ஹோ என்று அழைக்கப்படும் ”யட்நாமின் தந்தை” ’ஹோ ச்சி மின்’ , சந்தடி நிறைந்த பகுதியில் சடுதியில் தென்படும் ஏரி.
நீர் நிலையை , நீர் நிலையாய் விட்டு வைத்திருக்கும் மக்கள், வியட்நாமீஸின் வாழ்வியல், வடக்குக்கும்-தெற்குக்குமான நிலப்பரப்பு வித்தியாசம், சமையல் முதல் சம்மந்தம் வைத்துக் கொள்வது வரை, தோராய சித்திரம் ஒன்றை அளிக்கும் இறுதி அத்தியாயங்கள்.
ஃப்ரெஞ்ச் காலத்தில் கட்டப்பட்ட கட்டிடத்தில் இன்றும் இயங்கிவரும் “சென்ட்ரல் சய்கான்” தபால் நிலையம் குறித்தும் தபால் நிலையத்துக்கு வெளியே விற்பனைக்கு வைக்கப்பட்டு இருக்கும் அலங்கார மலர்கள் குறித்தும் எழுதுகிறார்.
நூற்றாண்டுகளாக இருக்கும் கட்டிடத்தையும், மணித்துளிகள் மட்டுமே மலர்ச்சியாய் நிற்கும் அலங்கார மலர்களையும் ஒரே உணர்வில் சிலாகிப்பவர்,எழுத்தின் இடையே இவ்வாறும் குறிப்பிடுகிறார்.
”நம்மைப் போலவே கிறுக்குத்தனங்கள் வாய்க்கப் பெற்றவர்களுடன் இருத்தல் ஒரு கொடுப்பினை தானே..?
****************************************************
வீ அட் நாம்
அருணா ராஜ்
நிகர்மொழி பதிப்பகம்
விலை : ரூ.100
****************************************************