இரண்டாயிரத்து ஒன்பதின் மே மாதம். அமெரிக்க வாழ்க்கை. இந்தியாவிலிருந்து வந்திருந்த அப்பா அம்மாவிற்காக தமிழ் சேனல் இணைப்பு கொடுத்திருந்த சமயம்.
“மட்டகளப்பில் இரு தரப்பினருக்கும் இடையே நடந்த தாக்குதலில்… ” என்று ஆரம்பிக்கும் ஒளிபரப்பு கூட்டு ஸ்தாபனத்தின் செய்தியை, பால்ய பருவத்தின் அனேக நாட்களில் கேட்டு வளர்ந்தவன் தான்.
திடீரென பார்க்க நேர்ந்த செய்தி…. இன்றளவும் மனக்கண்ணை விட்டு அகலாமல் நின்றிருக்கும் நிகழ்வு.
பிரபாகரனின் மரண செய்தி.
பல புத்தங்களை படித்தாயிற்று. இரண்டாயிரத்து இருபத்தி ஒன்னிலும் ஈர்க்கத்தான் செய்கிறார். “வாழ்வும் மரணமும்” என்ற உபதலைப்போடு பிரபாகரனின் பெயரை புத்தகத்தில் பார்த்தவுடன் எடுத்துவிட்டேன்.
பா.ராவின் எழுத்தில், எழுத்து பதிப்பகத்தில் பிரசுரமானது என்ற தகவல்களை எல்லாம் கிரகித்து கொண்டது அதற்கு அப்புறம் தான்.
தனது முதல் அக்கா வினோதினியின் திருமணம் நடைபெற இருந்த நாளன்று எல்லோரும் கூடியிருக்க, அவர் மட்டும் அங்கு இல்லை.
“ஐயா, தம்பி வந்துவிட்டான்..”
மகனின் வருகையை உறுதிப்படுத்தும் குரலை கேட்டபிறகே வேலுப்பிள்ளை சகஜ நிலைக்கு மீள்கிறார்.
”இப்படியே இருந்துவிட்டால் எல்லாம் தேவலை…”
ஒரு கணம் நினைத்து பார்க்கும் வேலுப்பிள்ளைக்கு அதன்பின்னான சூழ்நிலைகளின் தீவிரங்கள், அந்த கணம் எக்காலமும் திரும்ப போவதில்லை என்ற ஆழ் பெருமூச்சாக வெளிப்படுகிறது.
கதையை, சம்பவங்களை கையாள்வதில், பா.ராவின் வீச்சு நம் எல்லோருக்கும் ஏற்கனவே தெரிந்ததுதான்.
“வேதாரண்யத்துக்கு அவர்கள் வந்தபோது விடிந்திருக்கவில்லை…”
வரிக்கு முன்பான அனைத்து சம்பவங்களையும் அதன் விவரணைகளையும் இந்த ஒற்றை வரி தூக்கி சாப்பிட்டு விடுகிறது.
”தும்பியல் சம்பவம்” என்றை இரு வார்த்தைகளிம் மூலம் பின்னால் கடந்துசெல்லப்பட்ட சம்பவத்தின் ரிஷிமூல காரணங்களை தரவுகளோடு விளக்கியிருக்கிறார் பா.ரா.
”முணுக்கென்றால் தோணி பிடித்து தமிழகத்தில் இறங்கிவிடுகிறார்கள்….”
இந்திராவின் தலைவலிகளில் ஒன்றாக குறிப்பிடப்பட்டிருக்கும் விசயம். தற்போது கனடாவில் வசிக்கும், யாழ்பாணத்தை சேர்ந்த எழுத்தாளர் காலம்.செல்வம் உடனாக நேரடி உரையாடல்களில் கேள்விப்பட்டதுண்டு.
அவ்வளவு ஏன்… ”மதியம் படகேறி, மாலை காட்சி சினிமா பார்த்துவிட்டு திரும்பி விடுவார்கள்” என்று யாழ் மக்களின் தினசரி வருகையை என்னுடை கிராமமான தலைச்சங்காட்டில் ஊர் முதியவர்கள் சொல்லி கேட்டதுண்டு.”
இந்த புத்தகத்தில் என்ன இருக்கிறது, என்ன இல்லை. எதை எதிர்பார்க்கலாம் என்ற விபரங்களை தன்னுடைய ஆரம்ப குறிப்புகளிலேயே தெளிவாக வரையறையும் செய்துவிடுகிறார்.
***************************************************************************************************************
பாண்டி பஜார் துப்பாக்கி சூடு சம்பவம்.
ஆயுதமேந்தி வந்த கப்பல், எந்த சுங்க சோதனையுமின்றி சென்னை துறைமுகத்தை கடந்த மர்மம்.
மூத்த மகனுக்கு சார்லஸ் ஆண்டனி என்று பெயர் வைக்க காரணம்.
மதிவதனியை, கல்லூரி போராட்டம் ஒன்றின் மூலம் முதல் முதலாக சந்தித்தது.இந்திராவின் படுகொலையை கண்டித்து ராஜீவ்காந்திக்கு எழுதிய கடிதம்.
பிரபாகரனுக்கு ராஜீவ் கொடுத்த ரகசிய வாக்குறுதி.
ராஜீவ் கொலை வழக்கில் பொட்டு அம்மான் சேர்க்கபட்டதும், இயக்கத்தின் படி நிலைகளில் அவரை விட மேலிருந்த மாத்தையாவின் பெயர் இந்திய புலனாய்வு நிறுவனங்களால் எந்த வழக்கிலும் சேர்க்காமல் விடப்பட்ட மர்மம்.
1995ல் 43 கைதிகள் வேலூர் சிறையிலிருந்து ரகசிய அசைன்மெண்ட் ஒன்றின் பொருட்டு, இந்திய உளவுப்பிரிவால் தப்பிக்க வைக்கப்பட்டு, அசைன்மெண்ட் வேறு விதமாய் திரும்பிய காரணத்தால், தப்பித்த அத்தனை பேரையும் அள்ளிக்கொண்டு வந்ததன் காரணம்.
ராஜீவ் உடனான பேச்சுவார்த்தையில் உடன் இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன்.
***************************************************************************************************************
”என்ன காரணம் சொன்னாலும் நியாயப்படுத்த முடியாததாக இன்றளவும் உலகம் வைத்திருக்கும் ஒரே விசயம்,தனி மனித படுகொலைகள். பிரபாகரன் என்னும் ஆளுமையின் உருவாக்கத்திலும் சரி,பிம்ப சிதைப்பிலும் சரி, இந்த கொலைகளின் இடம் பெரிது.விடுதலைப் புலிகள் மீது தமிழ் மக்களுக்கு இருந்த மதிப்பில் அச்சம் கலக்கத் தொடங்கியது இத்தகைய கொலைச் சம்பவங்களுக்குப் பிறகுதான்.“
ஈழத்தில் உதித்த முப்பத்தி ஒன்பது இயக்கங்களில், எல்.டி.டி.ஈ இயக்கத்தை முன்னிலைப் படுத்திய பிரபாரனின் ஆளுமை “இரு முனை கூர் கத்தி” பிம்பமாய் மாறிப்போனதை மிகக் கச்சிதமாக எடுத்து சொல்லும் வரிகள்.
இன்றைக்கு நம் கைவசம் இருக்கும் தொழில்நுட்ப வசதிகளையெல்லாம், வெறும் கனவாய் இருந்த கால கட்டத்தில், முப்படைகளையும் தோற்றுவித்து, உலகமெங்கும் வியாபித்திருந்த ஆதரவு கரங்கள் கொண்டிருந்த மாமனிதனின் சறுக்கல் எங்கே ஆரம்பித்தது… ?
பரமபத விளையாட்டில் தன்னை முழுமையாக வைத்தாடிய அந்த மனிதன், வெற்றியை ருசிக்காமல் நந்திக்கடலில் கரைக்கப்பட்டதன் சரியான காரணம் என்னவாக இருக்க முடியும்..?
பா.ராவின் பதில் உள்பட பதில்கள் பல உண்டு.

+++++++++++++++++++++++++++++++
பிரபாகரன் – வாழ்வும் மரணமும்
பா.ராகவன்
எழுத்து பிரசுரம் [ஸீரோ டிகிரி பப்ளிகேஷன்ஸ்]
+++++++++++++++++++++++++++++++