சற்றே நீண்ட பதிவு…
ஹம்சத்வனியில் “வாதாபி கணபதிம்” வாசித்து முடிந்த கையோடு, திருமண தம்பதிகளுக்கு கை கொடுக்க, மேடை ஏறிவிடுவீர்கள் எனில் முதல் இரு பத்திகளோடு முடித்துக்கொள்ளலாம்.
திருப்புகழ் பாடி நிறைவு செய்கையில் மட்டும், வாசிப்பவர்களை நிமிர்ந்து நோக்குபவராயின் நேராக கடைசி பத்திக்கு செல்லலாம்.
தனி ஆவர்த்தர்தனத்துக்கு மட்டும் தனி கவனம் கொடுப்பவர் எனில் பதிவின் மத்திமத்தில் ஆரம்பிப்பது உத்தமம்.
ஆரம்ப ஆலாபனை முதல், மங்கள முடிவுவரை, முழு கச்சேரியையும் கேட்டு உய்பவர் எனில் முழுமையாய் தொடரவும்.
ஸ்ருதி டீவி [(86) Shruti TV Literature – YouTube] கபிலன் மேல் எனக்கு தனி மதிப்பு உண்டு. சென்னையில் நடக்கும் நிகழ்ச்சிகளை பதிவு செய்வது பெரிய விஷயமில்லை. தமிழகத்தின் மூலை முடுக்குகளில் நடைபெறும் இலக்கிய நிகழ்ச்சிகளை கூடுமானவரை பதிவுசெய்து யூடியூபில் தொடர்ந்து வலையேற்றம் செய்து வருபவர்.
என் பெருமதிப்பிற்கு உரிய மற்றுமொரு நண்பர் சுவாமிமலை சரவணன் அவர்கள்.
தன் தொழில்சார்ந்த வேலை பளுவிற்கு இடையே, தவில்-நாதஸ்வர இசை நிகழ்ச்சிகள் எங்கு நடைபெற்றாலும் அதனை ஒளிப்பதிவு செய்து பகிர்ந்து வருபவர்.
இசைக்கென்று பல சேனல்கள் உண்டு. கர்நாடக சங்கீதத்திற்கு என்றே பிரத்யேக பரப்புரை வழிகள் உண்டு. தவில்-நாதஸ்வர நிகழ்வுகளுக்கென பிரத்யோக ஒளிப்பதிவுகள் சரவணன் அவர்களின் முன்னெடுப்பிற்கு பின்னரே அமைந்தது என்று உறுதியாக சொல்ல முடியும்.
குடத்திலிட்ட விளக்காக இருந்த பாகனேரி பில்லப்பன் அவர்களின் நாதஸ்வர வாசிப்பை பரவலாக அறியவைத்தவர். (41) Nadaswaram Vidvan, Sri Pillappan, Performing Nadaswaram Music Beautifully Inside a Temple – YouTube
மாயவரம் தாளக்கலைஞர் தட்சாவை எத்தனை பேர் நினைவில் வைத்திருப்பார்கள்.
நாதஸ்வர வித்வான் செம்பனார்கோவில் S.R.D வைத்தியநாதன் அவர்கள், கர்நாடக சங்கீத பாடகர் சஞ்சய் சுப்ரமணியத்திற்க்கு,
”சவுக்க காலப்பிரமாணத்தில்” சொல்லிக்கொடுக்கும் அழகு… (41) Sembanarkoil SRD Vaidyanathan teaching Sanjay Subrahmanyan – YouTube
தவில் கலைஞர் எஸ்.ஆர்.டி.எம். பாலசுப்ரமணியம் அவர்கள் ஒரு கையில் கண்ட ஜாதி- மட்டிய தாளத்தையும் மறு கையில் சதுஸ்ர ஜாதி-திருபுடை தாளத்தையும் ஒரு சேர வெளிப்படுத்தும் திறமையை… (41) Corona Pallavi | Thavil Vidhwan S.R.D.M.Balasubramanian | – YouTube
“வாசுத்தம்பி உன்கிட்ட கேட்டது ”ஜதி”, நீ பாடம் சொன்னது ”கோர்வை”… நல்லாயிருந்தது…இருந்தாலும் நீ சொன்னது ஜதி இல்ல, கோர்வைங்கிறது உனக்கு புரியணுங்கிறதுக்காக சொன்னேன்…” (42) Nagaswaram and Thavil Competition – Grand Finale Part 2 – YouTube [41வது நிமிஷம் 47 வது நொடி]
இளம்தலைமுறை இசைக்கலைஞர்களுக்கு பக்குவமாய் , சிரித்த முகத்தோடு, சொல்லிக்கொடுக்கும் தஞ்சாவூர் திரு.டி.ஆர். கோவிந்தராஜன் அவர்களை…
ஐந்தாம் காலத்தை அசுர கதியில் எட்டும் மன்னார்குடி எம்.ஆர். வாசுதேவன் , திருப்பங்கூர் டி.ஜி.முத்துகுமாரசாமி, இருவரின் காணக்கிடைக்காத பல நிகழ்ச்சிகளை…
(42) Thavil Mannargudi vasudevan 2018 – YouTube (42) LEGEND TGM | THANI AVARTHANAM | THAVIL | தவில் mangalavadyam – YouTube
ஈரிழைத் துண்டு இடம் வலம் மாறும் கண நேரத்தில், தவில் நுணுக்கம் ஒன்றை சொல்லிச் செல்லும் திருநாகேஸ்வரம் டி.ஆர். சுப்பிரமணியம் அவர்களின் காணொளிகளை… (43) Thani Avarthanam – “Vaadhya Padhmam” Thirunageswaram T.R.Subramanian & M.S.Ravikumar – YouTube
[சுமார் முப்பத்தி ஐந்து வருடங்களுக்கு முன்பு திருநாகேஸ்வரம் டி.ஆர். சுப்பிரமணியம் அவர்கள் திருக்கடையூரில் குடியிருந்த காலம்.
விடிகாலையில் தலைச்சங்காட்டில் இருந்து சைக்கிளில் கிளம்பும் எனது தந்தையார் (தலைச்சங்காடு டி.எம்.ராமநாதன்), சுப்புணி மாமா வீட்டிற்கு வந்து, தவில் கணக்கு வழக்குகள் பற்றி இருவரும் பேச ஆரம்பித்தால் மணிக்கணக்கில் நீண்டுகொண்டே போகும்.
அப்பாவை வழியனுப்ப வரும் சுப்புணி மாமா ”வாணக்கார் டீக்கடை”யில் (திருக்கடையூரில் ”வாணக்கார் டீக்கடை” என்ற பெயரில் டீக்கடை ஒன்று இப்போதும் இருக்கிறது) வடை ஒன்றை வாங்கி என் கையில் கொடுத்துவிட்டு சிறுவனான என்னை சைக்கிள் கேரியரில் வைத்து பிடித்தபடி , தவில் வாசிப்பு குறித்து மீண்டும் இருவரும் பேச ஆரம்பிப்பார்கள்….]
மதுரையில் பல வருடங்களுக்கு முன்னாள் “பொன்னுசாமி நூற்றாண்டு” சிறப்பு விழாவில், தவிலிசையின் ”தஞ்சை நால்வர்” என்று அழைக்கப்பட்ட அரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேல், திருவாளபுத்தூர் டி.ஏ.கலியமூர்த்தி, தஞ்சாவூர் டி.ஆர்.கோவிந்தராஜன், வேதாரண்யம்.வி.ஜி.பாலசுப்பிரமணியம் ஆகியோர் ”தவில் சோலோ” வாசிப்பதாக முடிவு செய்யப்பட்டிருக்கையில், பாடகர் மதுரை சோமு தானாக முன்வந்து தன்னுடைய பல்லவிக்கு நால்வரும் தனி ஆவர்த்தனம் வாசிக்கட்டும் என்று நிகழ்ச்சியின் வடிவை சுவாரஸ்யமாக்கியது.
நாப்பது வருடங்களுக்கு முன்பான நிகழ்வொன்றை, நால்வரில் ஒருவரான வேதாரண்யம் வி.ஜி.பாலசுப்பிரமணியம் அவர்கள் விவரிப்பது… (41) Part 03 – Thavil Vidhwan Vedaranyam V G Balasubramaniam – “Sharing Memories of his Musical Journey” – YouTube [ 2 வது நிமிடம், 19வது வினாடி]
தத்தகார பல்லவி வரிசை காணொளிகளை காண, வார நாட்கள் போதாது…
(72) Thathakara Pallavi – Nagaswaram Thiruppampuram T.K.S.Meenakshisundram & T.S.N.Seshagopalan – YouTube
(72) Thathakara Pallavi – Nagaswaram Thirumeignanam T P Ramanathan Pandamangalam G Yuvaraj – YouTube
Thathakara Pallavi – Nagaswaram A.Vijay karthikeyan & V.Prakash Ilayaraja – YouTube
குந்தர வராளியில் “சர சர சமரை…” என்று திருக்கோவிலூர் டி.எஸ்.ஈ. பாபு-டி.எஸ்.ஏ.குமார் சகோதரர்கள் ஆரம்பித்தவுடன், சரவெடியாய் தவிலில் தொடரும் கோவிலூர் கே.ஜி.கல்யாணசுந்தரம். கீர்த்தனையின் முடிவில் கே.ஜி.கல்யாணசுந்தரத்தை இணைந்து கொள்ளச்சொல்லும் அரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேல் அவர்களின் பாங்கு….
(41) Haridwaramangalam Muthumariamman Festival 2021 | Ragam Kuntalavarali | – YouTube
கையில் சுருட்டி வைத்திருக்கும் புகையிலையை போலவே , மனதில் சுருட்டி வைத்திருக்கும் ”சுவாமிமலை சுவாமிநாதன்” கீர்த்தனையை “சுருட்டி” ராகத்தில், நாதஸ்வர வித்வான், கீழ்வேளூர் என்.ஜி.கணேசன் அவர்கள் உருவாக்க ஆரம்பிக்கும் தருணம். (41) Ragam : Surutti – Swamimalai Swaminathaswami Kriti – Composer Kizhvelur Nagaswaram N G Ganesan – YouTube
குறிப்பிடத்தகுந்த மற்றுமொரு அம்சம், வளரும் கலைஞர்களின் காணொளிகளை சேகரித்து வலையேற்றம் செய்வது. இன்றைய அதிவேக தொழில்நுட்ப காலகட்டத்தில், வீடியோ பதிவுகள் எடுப்பது சிரமமான காரியமல்ல… அவற்றை தொகுத்து, வளரும் கலைஞர்களின், ஐந்து தலைமுறை முன்னோர்கள் வரை ஆவணப்படுத்துவது சரவணனின் தனித் தன்மை.
மேலும் இருவரைப் பற்றி குறிப்பிடாவிட்டால் இந்த பதிவு முழுமை பெறாது.
முதலாமவர் : திரு. லலிதா ராம். ”கமகம்” என்ற பெயரில் கர்நாடக இசைக் குறித்தான தேர்ந்த ரசனை மற்றும் அவதானிப்புகளுடன் கூடிய கட்டுரைகளை தனது வலைத்தளத்தில் எழுதிவருபவர் [Lalitharam | கமகம் (wordpress.com)] . பரிவாதினி [(43) Parivadini Music – YouTube] என்ற அமைப்பினை நிறுவி, அதன் மூலம் இசை சார்ந்த பல முன்னெடுப்புகளை குறிப்பாக தவில் மற்றும் நாதஸ்வர கலைஞர்களுக்கான பிரத்யேக இசை நிகழ்ச்சிகள், வளரும் இளம் கலைஞர்களுக்கான தவில் மற்றும் நாதஸ்வரங்கள் வழங்குதல், மல்லாரி வாசிப்பு முறைகளை ஆவணப்படுத்துதல் [(43) Nadamum Nathanum – Thaligai Mallari – YouTube] என்று தொடர்ந்து இயங்கிவருபவர்.
இரண்டாமவர் : இசை ஆய்வாளர். திரு.பி.எம்.சுந்தரம். தவில் நாதஸ்வர கலை மற்றும் கலைஞர்கள் மற்றிய விபரங்களை விரல் நுனியில் வைத்திருப்பவர். அமெரிக்காவின் கிளீவ்லேண்ட் நகரில் வருடந்தோரும் நடைபெறும் தியாகராஜ ஆராதனை விழாவிற்க்கு “மல்லாரி வாசிப்பு” பற்றிய பி.எம். சுந்தரம் அவர்களின் விளக்கவுரையோடு, எனது தந்தையார் [தலைச்சங்காடு டி.எம்.ராமநாதன்] , இஞ்சிகுடி இ.எம்.சுப்பிரமணியன் மற்றும் சுவாமிமலை எஸ்.சி.குருநாதன் ஆகியோரின் நிகழ்ச்சி ஏற்பாடாகி இருந்தது.(72) Nadhaswaram&Thavil – Cleveland Aradhana 2009 – YouTube
பி.எம். சுந்தரம் அவர்கள் எழுதிய ”மங்கள இசை மன்னர்கள்” என்ற புத்தகத்தினை பற்றிய விபரங்களை, பி.எம். சுந்தரம் அவர்களை கிளீவ்லேண்டில் சந்தித்தபோது, நேர் பேச்சில் தெரிந்துகொண்டேன்.
1787 முதல் 1975 வரையிலான 47 தவில் கலைஞர்கள், 1815 முதல் 1988 வரையிலான 81 நாதஸ்வர கலைஞர்கள் குறித்து பிறப்பிடம், பெற்றோர், உடன் பிறந்தோர்,குருநாதர்,மனைவி,பிள்ளைகள்,சிஷ்யர்கள்,முக்கிய நிகழ்வுகள்,சுவாரஸ்ய தகவல்கள் என்ற வடிவத்தில் தொகுத்தளித்திருக்கிறார் திரு பி.எம்.சுந்தரம்.
அப்புத்தகம் குறித்தான எனது கட்டுரை எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்களின் தளத்தில் பிரசுரமாகியுள்ளது.மங்கல இசை மன்னர்கள் | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)
பிம்.எம். சுந்தரம் அவர்களையும், லலிதாராம் அவர்களையும் இங்கே நினைவு கூறக் காரணம். சரவணன் அவர்களுக்கு முன்பாக எனக்கு அறிமுகமானவர்கள்.. இசை குறித்த அரிய தகவல்களை, களஞ்சியங்களை அச்சில் ஆவணப்படுத்தியவர்கள், தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டு இருப்பவர்கள்…
சுவாமி மலை சரவணன் அவர்களை இருவரின் வழித்தோன்றலாக பார்க்கிறேன். தவில்-நாதஸ்வரம் குறித்து அவர் தொகுத்தளித்து கொண்டிருக்கும் இந்த காணொளிகள், கல்லில் செதுக்கப்பட்ட இசை துணுக்குகள். அழிவின்மைக்கு அப்பால் எப்போழுதும் நின்றுகொண்டிருக்கும். உடன் அவருடைய சித்தப்பா, மறைந்த திரு. மு.சீனிவாசன் என்கிற தேணுகா அவர்கள் ஆசியும்.
வாழ்த்துகள் சரவணன்!
எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்களின் வைர வரிகளின் வழி, எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
நலம் திகழ்க!!
எப்பொழுதும் சென்றடையவில்லை என்ற நிறைவின்மையை கொள்க!!!
– தலைச்சங்காடு யோகேஸ்வரன் ராமநாதன்.
3 comments on “தேணுகாவின் வாரிசு..”
மிக முக்கியமான கட்டுரை. சுவாமிமலை சரவணன் அவர்களின் தொகுப்பு தமிழ் நாகரிகத்தின் மிக முக்கியமான கலை ஆவணம். உங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்புகள் மறுக்க முடியாதவை. பாகநேரி பில்லப்பன் சரவணனின் உட்சபட்ச கண்டெடுப்பு.
நன்றி பிரகாஷ்.
நன்றி பிரகாஷ்…