அனைவருக்கும் வணக்கம்!
அவையினருக்கும், நூல் அறிமுகம் செய்து முடித்த, செய்யப்போகிற கவிஞர்கள் இருவருக்கும், மூன்று நூல்களின் ஆசிரியர்களுக்கும் நன்றிகளை சொல்லி ஆரம்பித்திருக்க வேண்டும்.
இதே மேடையில் நெறியாளராக இருந்து ”இன்னும் 5 நிமிடம் மட்டும்”. என்று துண்டு சீட்டுகள் கொடுக்க வேண்டிய
என்னை, இன்று எனக்கு நானே துண்டு சீட்டு கொடுத்து கொள்ள வேண்டிய நிர்பந்தத்தை உருவாக்கி இருக்கிறார் நண்பர் முருக தீட்சண்யா.. இது ஒரு வகை பழிவாங்கும் நடவடிக்கை தான்.
பொதுவாக புத்தக அறிமுக உரையை மூன்று விதமா பிரிக்கலாம்.
முதல் வகை :
அம்பிகாவர்ஷினில ஆரம்பிச்சி ..அப்படியே அமிர்தவர்ஷினி ராகத்தை தொட்டு… அந்த ராகத்தோட ஆரோகணம், அவரோகணம் பற்றி சொல்லி, அமிர்தவர்ஷினி ராகத்துல அமைஞ்ச கீர்த்தனைளை சொல்லி, அப்புறமா அதே ராகத்துல அமைஞ்ச சினிமா பாட்டு ரெண்டு மூணு சொல்லி, முடிஞ்சா பாடிகாட்டி, அப்படியே யூ டெர்ன் அடிச்சி புத்தகத்துக்கு வந்து, புத்த அட்டையை பற்றி பேசி.. பேப்பர் குவாலிடி பற்றி சிலாகித்து, கடைசிவரை புத்தகத்தின் கதைகளை பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லாமல், சிறப்புற பேசி அமருவது.
இரண்டாவது வகை :
வீட்டுலேருந்து வரும்போதே, புத்தகம் புல்லா மார்கெர்ஸ் வச்சி எடுத்துட்டு வந்து, வரி வரியா படிச்சி, டயர்டாகி , ஒருவழியா பேச்ச முடிச்சிக்கிறது…
மூணாவது வகை :
இந்த புத்தம்
1) : எதை சொல்கிறது?
2) : எதை விடுகிறது?
3) : அந்த விடுபடல்கள் தற்செயலாய் நடந்தவையா?
4) : அல்லது நூலாசிரியர் மேலதிகமாக எதையாவது சொல்லிச் செல்கிறாரா?
5) : எவ்வகையான எழுத்து?
6) : எவ்வாறான மொழிநடை?
7) : கதைக்களங்களுக்கான மெனக்கிடுதல்கள் என்ன?
8) : அவற்றை எழுத்தின் ஊடக சரியாக சொல்லிச் செல்கிறாரா?
9) : புத்தகம் சார்ந்த தகவல்கள்
10) : புத்தகத்துக்கான இலக்கிய இடம் என்ன?
என்று குறைந்தபட்சம் இந்த பத்து விசயங்கள் சார்ந்து உரையை ஒருங்கமைத்துக் கொண்டு புத்தக அறிமுகம் குறித்து பேசுதல்.
இந்த மூன்றில் என்னுடைய உரை எப்படி இருக்கப் போகிறது என்பது உரை முடிந்ததும் தெரிந்துவிடும்.
”நான்” எனும் தன்மை கூறில் பத்து கதைகளும் அமைந்த புத்தகம்.
1) : எழுத்தாளர் அருணா ராஜ் அவர்கள் எழுதிய “இரண்டாவது புத்தகம்” என்ற தலைப்பிலே வெளிவந்துள்ள புத்தகம்.
2) : பொன்முகலி என்ற புனைபெயரில் எழுதிவரும், எழுத்தாளர் தீபு நடராஜுடைய “கடவுளுக்கு பின்” புத்தகம்.
அந்த வரிசையில், ஒரு தொகுப்பின் எல்லா கதைகளும் “நான்” எனும் தன்மை கூறில் அமைந்த சிறுகதை தொகுப்பு இதற்கு முன் வெளிவந்துள்ளதா? அல்லது இந்த புத்தகம்தான் “தமிழக இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக…” என்ற பெருமையை பெறப்போகிறதா என்று தெரியவில்லை. நூலாசிரியர் இதற்காக பதிலை தன்னுடைய ஏற்புரையில் தெரிவிப்பார் என்று நம்புவோம்.
”மதுரையை எழுதுபவர் என்ற அடையாளத்தோடு, தமிழ் நிலப்பரப்பின் மனிதர்களை அதன் வழியாக உணரவும் வைப்பவர் என நகரவேண்டும்”
தமிழ் இலக்கிய விமர்சகரும்,ஊடக ஆய்வாளருமான அ.ராமசாமி புத்தகத்திற்கான அணிந்துரையில் குறிப்பிடுகிறார்.
சிதைமுகம் புத்தகத்தை வாசிப்பதற்கான முருகதீட்சண்யா எனக்கு அளித்த நாளில் நான் படித்துக் கொண்டு இருந்த புத்தகம் எழுத்தாளர் சாம்ராஜ் எழுதிய “கொடைமடம்” நாவல். மதுரை கதைகளத்தை அங்குலம் அங்குலமாக விவரித்து இருக்கும் ஒரு நாவல்.
1) :மூன்று புறமும் பொது சுவர்களை கொண்ட வீடுகளாக அமைந்த நடுக்குளம் பகுதி…
2) : 1973ல் வைகை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, அதில் சிக்கிக் கொண்ட பெண் ஒருவர், காப்பாற்றவரும் ஹெலிகாப்டரில் இருந்து வீசப்படும் கயிற்றை பிடித்து மேலே வருகிறார், தன்னிலை உணர்ந்த பின் கயிற்றை விட்டு மீண்டும் தண்ணீருக்குள் குதித்து விடுகிறாள்.
”சிதைமுகம்” தொகுப்பு மதுரை மண்ணை எவ்வாறாக அறிமுகப் படுத்துகிறது?
1) : நிலப்பரப்பு சார்ந்தா?
2) : மக்களின் வாழ்வியல் சார்ந்தா?
3) : ரசனைகளின் மையப்புள்ளியை சார்ந்தா?
பத்து கதைகளையும் படித்து முடிக்கும்போது வாசகனுக்கு ஒரு அனுமானம் கிடைக்கக் கூடும்.
அணிந்துரை அளித்து இருக்கும் மற்றொரு எழுத்தாளர் அகிலா.
”உறவுகளிடையே அவளின் இருப்புத்தன்மையை விவரிக்கும் விதத்தில், தன்னிலைக்கான புரிதலையும் இலகுவாக சொல்லிச் செல்கிறார். இந்த கட்டுடைப்பு இவரின் கதை சொல்லும் விந்தை எனலாம்”
இதோடு நிறுத்தி இருந்தால் பொதுவானதொரு அணிந்துரையாக இருந்திருக்கும், ஆனால், அடுத்ததாக,
“பெண்ணின் மனதிற்கு நாடுடைப்பு சாத்தியப்படுமா…? என்ற கேள்வி ஒன்றையும் முன் வைத்து இருக்கிறார்.
நாடுடைப்பு குறித்து நூலாசிரியர் பிறிதொரு சமயத்தில் தனி உரை ஒன்று தரவேண்டும். முருக தீட்சண்யா அதற்கு ஆவன செய்வார் என்று நம்புகிறேன்… 🙂
நூத்தி பண்ணிரெண்டு பக்கங்கள் கொண்ட புத்தகம் :
இருப்பதிலயே அதிக பக்கங்கள் கொண்ட கதை தப்பிதம். 23 பக்கங்கள்
தப்பிதம்
1) : பேருந்து சுலபமாக பேருந்து நிலையத்தில் இருந்து அகலத் தொடங்கியது
2) : மலர்ந்த ஈரமுடைய பூக்களை, பூச்சரங்களை பார்த்துவிடவே முடியாது
3) : மூன்று ஸ்டிக்கர்களும் எனக்கு முன்னாலேயே பயணிக்கத் தொடங்கிவிட்டதாக நம்பினேன்.
4) : பயணம் முழுவதும் பசியோடு பயணம் செய்யும் கதாபாத்திரம். ஆனால் கதையின் மையக் கரு பசி அல்ல…
வண்டி நிற்காதா.. எதையாவது வாங்கி சாப்பிட மாட்டோமா…
உரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டு இருந்த முதல்வகை பேச்சு. அதை அழகாக கையாண்டு இலக்கிய பிரதியாய் மாற்றி கொண்டுவரப்பட்டு இருக்கும் கதை “தப்பிதம்”
சப் டெக்ஸ்ட்?
கதையின் மறைபிரதி சொல்வதென்ன?
பக் : 45 :
1) : நான் என்ன செய்யவேண்டும் இப்போது, நிற்பதா இல்லை காத்திருப்பதா…?
நிற்பதா இல்லை காத்திருப்பதா..? இரண்டும் ஒன்றுதானே,,, எப்படி வேறு வேறாக ஆகும்..?
2) : பேருந்தில் அருகில் பயணிக்கும் பெண், தோழி ரேவதி இருவரும் பதட்டமாகவே இருக்கிறார்கள்.
ஆனால் உண்மையில் பதட்டமாக இருப்பது, கதையின் நாயகிதான், சொல்லப்போனால் நாயகிமட்டுமேதான்.
பக் : 46 :
3) : சறுக்கு பாதையில் ஏறுவது, இறங்குவதும்
தோழி ரேவதி வீட்டுக்கு வந்தவுடன், வாசலில் இருக்கும், இருசக்கர வாகனங்கள் ஏற்றுவதற்கு வைத்திருக்கும் சறுக்கு மரம் போன்ற சிமெண்ட் பகுதி வழியே உள்ளே ஏறுகிறார். கடும் துயரத்தை தாங்கிய பயணம், இருந்தாலும், தனக்குள் இருக்கும் சிறுமி இன்னும் பெரியவல் ஆகிவிடவில்லை என்பதை அவ்வப்போது உணர்த்தும் கதாபாத்திரம்
பக் : 51 :
4) : அப்பா மட்டும் இல்லன்னா…
தோழி ரேவதியின் வீட்டுக்கு வந்த பிறகு, அப்பாவை பற்றிய பேச்சு வருகிறது..
எழுத்தாளர் அ.முத்துலிங்கம், எழுத்தாளர் அருண்மொழி நங்கை அவர்களுடைய “பனி உருகுவதில்லை” தொகுப்பிற்கான முன்னுரையில்,
பின்னுக்கு பின் நகர்ந்து போட்டோ பிடிக்கும் போட்டோகிராபர் போல…
பின்னுக்கு பின் நகர்ந்து ஆலத்தூர் சிறுமியாக ஆகியிருக்கிறார்” என்று எழுதி இருப்பார்.
பசியுடன் கூடிய ஒரு பயணம், அது தரும் அயற்சி, அதில் இருந்து பின்னோக்கி….
அதன் பிறகு இன்னும் பின்னோக்கி…. என்று விரிந்து கொண்டே செல்லும் சிறுகதை.
குறிப்பாக கதை சொல்லியும்-அவரது தோழி ரேவதியும் பேருந்து புறப்பட்டு செல்கையில் கண்களால் சந்தித்துக் கொள்ளும் அந்த கடைசி தருணங்கள்…
முடியும் இடத்தில் ஒரு சிறந்த தொடக்கத்தை கொண்டிருப்பது, சிறந்த சிறுகதைக்கான அடையாளம்.
சிதைமுகம் தொகுப்பில் உள்ள ”தப்பிதம்” கதை, அவ்வாறான அம்சங்களை கொண்ட கதை. மறைபிரதி மூலம் சொல்லாமல் சொல்லிய செய்திகள் ஏராளம்.
சிதைமுகம் சிறுகதையே, நூலின் தலைப்பாக இருந்தாலும், தப்பிதம் கதை இந்த தொகுதியின் நட்சத்திர அந்தஸ்து கொண்ட கதை என்று தாராளமாக சொல்லலாம்….
தொகுப்பில் எழுத்து பிழைகள் சில உண்டு, அடுத்த பதிப்பிற்கு முன் எழுத்தாளர் அவற்றில் கவனம் கொள்ளலாம்
*****************************
பக் : 44 :
1) : டிராபிக் போலிஸ் நிற்கும் கூண்டு காலியாக இருப்பது தெரிகிறது. மிஞ்சுகிறது
பக் : 45 :
2) : கையில் பேக்கின் கைப்பிடிகள் அழுந்தியது. கைளை (கைகளை)
பக் : 49 :
3) : பிரியாணி பொட்டலும்..
*****************************
போலவே தர்க்க பிழைகளும்…
குதர்க்கம் என்ற தலைப்பில் ஒரு கதை
பக் : 86.
1) : கதை சொல்லி, ஸ்பிரிங் உடைந்து விட்ட, பச்சை நிற கிளிப் ஒன்றை புத்தக செல்ஃபில் வைக்கிறார், சில நாள் கழித்து திரும்ப எடுக்கையில் பச்சை நிற கேரி பேக்காக விழுகிறது. புத்தக அலமாரியில் வைக்கப்பட்ட பச்சை நிற கிளிப், எப்படி பச்சை நிற கேரி பேக்குக்குள் சென்றது? கதையின் தலைப்பே குதர்க்கம் என்று இருப்பதால் கேட்கத் தோணியது.
நூலாசிரியர் மேஜிகல் ரியலிசம் எதேனும் எழுத்தில் முயன்று பார்த்திருக்கிறாரா என்று தெரியவில்லை.. ஒரு வேலை தொகுப்பின் கதைகள் முழுவதும் இருத்தலியல் சிக்கல்கள் சார்ந்த விசயங்களை மையக்கருவாக கொண்டிருப்பதால், ஒரு வித்தியாசத்திற்கு மேஜிகல் ரியலிசம் முயன்று பார்த்து இருக்கக் கூடும்.
விருந்தாளி – கதை
தனிமையில் இருக்கும் வீட்டின் உணர்வுகளை சொல்லுதல்.
“யாருமில்லாத வீடு, இந்த வீட்டில் அப்படி என்னதானிருக்கிறது? எல்லாப் பக்கமும் பொருட்கள். தனிமையில் இருக்கும்போது வீடு எதாவது சொல்லுமா? அந்த வீட்டினுடைய ஆட்கள் புழங்கிய தன்மையை உணர்த்துமா? இந்த வீட்டிற்கென்று ஒரு குணம் உண்டென்று எடுத்துக்காட்டுமா?
உறவுச்சிக்கல்களை அது தரும் அழுத்ததில் இருந்து,ஏமாற்றதில் இருந்து மீண்டெழுவதை, அழகாக உணர்த்தும் கதை.
சென்னை வந்து இறங்கும் கதை சொல்லி, காலை கடன் கழிப்பதற்காக, உறவினர் வீடுகளுக்கிடையே அல்லாடுகிறாள்….
வெள்ளிக்கிழமை ஒன்றில் ஊர் திரும்ப எண்ணும்போது, ”வெள்ளிக்கிழ போக்கூடாதும்மா…” என்ற மறுப்புக்கு
“அதெல்லாம் ஓண்ணுல்ல,, நான் கெஸ்ட்தானே…. ” என்று பதில் சொல்லும் தருணம்.
வாசக இடைவெளி
பக் : 43 :
தப்பிதம் கதை :
”கடைசியாக அவளை திருமணத்தில் பார்த்தது. காதல் திருமணமென்றாள். வயிற்றைக் கூட எதேச்சையாக பார்த்தபோது மேடாக தெரிந்தது. சந்தேகம்தான். அவள் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகியிருக்கலாம். அவளிடம் கேட்கத் தோன்றவில்லை., உற்ற தோழியாக இருந்தாலும் அவளாக, அவளது அந்தரங்கத்தை பற்றி சொல்லாமல் நாம் கேட்க முடியாது.”
அவள் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகியிருக்கலாம்– இந்த வரி இல்லாமல் இந்த பத்தியை படித்துப் பார்த்தால் அது தரும் மேலதிக வாசக இடைவெளிக்கான தருணம் புரியும்.
வாசகனுக்கு எல்லாவற்றையும் புரிய வைத்துவிட வேண்டும் என்ற எண்ணம் நல்லதுதான்… ஆனால்… வாசகனுக்கான ஸ்பேஸில் நூலாசிரியர் கவனம் கொள்ளலாம்.
உதாரணம்-1 :
1) : கொடைமடம் நாவலில் இருந்து சொன்ன தகவல் :
ஹெலிகாப்டரில் இருந்து வீசப்படும் கயிற்றை பிடித்து மேலே வருகிறார், தன்னிலை உணர்ந்த பின் கயிற்றை விட்டு மீண்டும் தண்ணீருக்குள் குதித்து விடுகிறாள்.
என்ன நடந்து இருக்கும்…?
உதாரணம்-2 :
சிங்கப்பூரை சேர்ந்த எழுத்தாளர் பிரியா ராஜு அவர்கள் எழுதிய… “கழுவேற்றம்” என்ற தலைப்பில் ஆன சிறுகதை. தங்கமுனை விருது பெற்ற சிறுகதை.
<…….கதையை சொல்லுதல்…>
பிரியா ராஜூவ். கதையின் கடைசி அத்தியாயம் கொடுக்க கூடிய சாத்தியக் கூறுகள் என்னென்ன….
1) : பேப்பரில் பார்த்தது அவனுடைய தாயார் அல்லாம வேறு யாராகவோ இருந்திருக்கலாம்.
2) : அன்றைய தினம் எதிர்பாராதவிதமாக அவனுடைய தாயார் அவனை நேரில் சந்திக்க வந்து இருக்கலாம். ஓவியத்தை தன் கையால் நேரடியாக கொடுக்க வாய்ப்பு கிடைத்திருக்க கூடும்
3) : அவனுடைய தாயார் இறந்து போன செய்தியை இவன் அறிந்து கொள்ளும் தருணம் அதிகாரி இவனுடைய ஓவியத்தை வீட்டுக்கு அனுப்பி வைக்க கிடைத்து இருக்கும் அனுமதி கடிதத்தோடு வருகிறார்.
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்…
முடிவு :
”மதுரையை எழுதுபவர் என்ற அடையாளத்தோடு, தமிழ் நிலப்பரப்பின் மனிதர்களை அதன் வழியாக உணரவும் வைப்பவர் என நகரவேண்டும்”
உரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட அ.ராமசாமி அவர்களின் அணிந்துரையில் மேலும் சில வரிகளும் உண்டு.
”அந்நகர்வு தன்னியல்பாகவே இந்திய பரப்புக்கும், உலகப் புனைவு வெளிக்குள்ளும் இட்டிச்செல்லும். அதற்கான எத்தனிப்புகள் கொண்ட எழுத்தாளராக வளர வேண்டும்”
அ.ராமசாமி அவர்களின் வாக்கு பலிக்கட்டும்… நன்றி!!!