வெண்முரசு வாசிப்பனுபவம்அன்பின் ஜெ,
வணக்கம்.

வெண்முரசு என்ற தலைப்பில் மகாபாரதத்தை தொடர் நாவல்களாக எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்.இதுவரை 13 நாவல்கள் முடிந்துவிட்டது, பாராட்டுக்கள்!!! ,14வது நாவலை தொடங்கியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்!!!.

வெண்முரசைப்பற்றி முழுதும் அறியாமல் வெறும் முறைமைச்சொற்களாலான மேற்கண்ட வரிகளே 2017 மார்ச் வரை என்னுடைய புரிதல்.

ஒத்திப்போடபட்டுக்கொண்டே இருந்த அந்த தருணம் தொடங்கியது சென்ற மார்ச் மாத இறுதியில் ”கீழ்வாலை குகை ஓவியங்கள்” பார்க்க சென்ற பயணத்தின் ஒரு புள்ளியில்.

மங்கிய ஒளியில் மல்லாந்து படுத்துக்கொண்டு குகை ஓவியங்களை பார்த்துக்கொண்டிருக்கையில் “ஏம்பிரபு, வெண்முரச முதல் நாவல்லேருந்து படிச்சிமுடிக்க எவ்ளோ நாளாகும்?. ஒரு நாளக்கி 2 மணி நேரம் வீதம் படிச்சா சீக்கிரம் முடிச்சிடலாம்ல்ல,?” புன்சிரிப்பொன்றை பதிலாக்கி மறுபக்கம் திரும்பிக்கொண்டார் மயிலாடுதுறை பிரபு.

2017 ஏப்ரலில் இறுதியில் ஊட்டி காவிய முகாமிற்க்கு செல்வதற்க்கு முன்பாக முடித்துவிடவேண்டும் என்பதை இலக்காக வைத்து, கீழேயுள்ள இரு முறைமைகளை எனக்குள் அறிவித்துக்கொண்டு, ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் முதற்கனலின் முதல் அத்தியாயத்தை தொடங்கினேன்.

1). எந்த ஒரு வரியையும் படிக்காமல் தாண்டிசெல்லாதிருத்தல்.

2) .வாசிப்பினிடையே சுயபரிசோதனை செய்துகொள்ளுதல்.

முழுகவனக்குவிப்புடன் தொடர்ச்சியான வாசிப்பு (ஒவ்வொருநாளும் அனேகமாய் 8 முதல் 10 மணி நேரங்கள்). ஊட்டி சந்திப்பிற்க்கு புறப்படும்வரை வெய்யோன் வரை முடிக்க முடிந்தது.

சிறு இடைவெளிவிட்டு இரண்டாம் கட்ட வாசிப்பை திட்டமிடுகையில் ”நீர்கோலம்” தொடங்கப்படும் அறிவிப்பு தளத்தில் வெளியானது, அதையே இலக்காக கொண்டு இரண்டாம் கட்ட வாசிப்பை 10 நாட்களில் முடிக்க திட்டமிட்டு, இரு நாட்கள் பின்தங்கி(பாகவதமேளாவிற்க்காக மெலட்டூர் பயணம்) முடித்தேன்.

மாமலரை முடித்த அன்று நிறைவைகொண்டாடும் பொருட்டு தரங்கம்பாடி கடற்கரைக்கு விஜயம். நானும், உடன் வந்த சகோதரியின் மகனும் வெண்முரசை ஈரமணலில் எழுதி, அலை அதனை அழித்து செல்வதை பார்த்து ரசித்துக்கொண்டிருந்தோம்.

புஷ்கரவனத்தில் மானசாதேவியின் மடியிலமர்ந்து கதைகேட்கும் ஆஸ்திகனுக்கான புரிதலோடு முதற்கனலில் தொடங்கிய என் வாசிப்பு,மழைப்பாடல்,வண்ணக்கடல் என தொடர்ந்து செல்கையில் விரிவடைந்து “நீங்கள் தேடிசென்றதை அடைந்துவிட்டீர்களா” என்ற சகாதேவனின் கேள்விக்கு ”ஆம், என் வரையில்..” என்று பீமன் பதிலளிக்கும் மாமலரின் நிறைவுவரையான தொடர்வாசிப்பு, சகாதேவனின் கேள்விக்கான, மந்தனின் பதிலையும் எனதானதாகவே எண்ணவைத்தது.

*************************************************

இந்தியா டுடேவிற்க்காக நீங்கள் அளித்த நேர்காணலில்(http://www.jeyamohan.in/66259#.WS7dZLnBAdU ) கேட்கப்பட்ட ஒரு கேள்வியும் அதற்கான உங்கள் பதிலும்.

ஒரு வாசகனாக வெண் முரசின் மிகச் சிறப்பான வெளிப்பாடாக நான் உணர்வது,,ஒற்றை வரிக்கு மேல் நாம் அதிகம் அறிந்திராத மகாபாரத கதாபாத்திரங்கள் பிரமாண்டமாக உலவுவது…உதாரணம் சகுனி,துரோணர்,அம்பை,ராதை.. எப்படி அக் கதாபாத்திரங்களை முழுமையாக உருவாக்குகிறீர்கள்?

மகாபாரதம், மூவாயிரம் நாலாயிரம் வருஷம் பழமையானது. அன்னைக்கு உள்ள மதிப்பீடுகள்ல மாவீரர்களும், பேரறிஞர்களும் ,முனிவர்களும்தான் முக்கியமானவங்க. மத்தவங்க முக்கியமற்றவர்கள். ஒரு வரி, ரெண்டு வரிதான் அவங்களைப் பத்தி சொல்ல கொடுக்கப் படுது. அதுவும் அவங்க மன்னர்களா இருந்தா மட்டும்.மத்தவங்களுக்கு இடமே இல்ல.

ஆனா இருபதாம் நூற்றாண்டுல,ஜனநாயக யுகத்துல,இருந்து கொண்டு மகாபாரதத்தை அணுகும் போது நாம மேலும் எழுத வேண்டி இருக்கு. அந்த கதைகூறலிலே விடுபட்டு போன கதாபாத்திரங்களுக்கு மேலும் அதிக கவனம் கொடுக்கிறோம். உதாரணமா விதுரனோட அன்னை. அவங்க ஒரு பணிப்பெண்ணா இருந்தாங்க. வியாச பாரதத்துல அவங்கள பத்தி மொத்தமே ஆறு வரிதான் சொல்ல பட்டுருக்கு. வியாசர் கிட்ட போனாங்க. விதுரரை பெற்றேடுத்தாங்க. அவ்வளவுதான். ஆனா இந்த நாவல்லநாலஞ்சு அத்தியாயங்கள்ல அவங்களோட முழு கதை இருக்கு . அவங்களுக்கு ஒரு பெயர் இருக்கு. அவங்களுக்கு ஒரு முகம் இருக்கு.

இப்போ,இந்த கதாபாத்திரங்கள் எப்படி உருவாக்க படுதுன்னா……….அந்த,கதை சந்தர்ப்பம் இருக்கு இல்லையா, அது கற்பனையை தூண்டுது. பாருங்க, ஒரு சாதாரண பணிப்பெண், ஒரே இராத்திரில, வியாசரோட படுக்கையறைக்கு போறா .அது அவளுக்கு வாழ்க்கைல கிடைக்க கூடிய ஒரு எழுச்சி ,ஒரு பெரிய வரம். அந்த வரமே அவளுக்கு எப்படி சாபமா மாறும் அப்படின்னு பாக்கலாம்கு இல்லையா… ஒரு பிள்ளையை கொடுப்பதற்கான ஒரு பாத்திரமா மட்டும்தான் ஒரு பெண் பார்க்கப்பட்டாள் அப்படிங்கிறது அவளுடைய வாழ்க்கை எந்தளவு காலியா இருக்கிறது அப்படின்னு காட்டுது இல்லியா…இந்த கேள்விகளோட மகாபாரதத்தை அணுகவதற்காக மட்டுமே இந்தப் படைப்பு எழுதப்பட்டுருக்கு.

*************************************************

வெண்முரசின் கதைமாந்தர்களில் என்னை அதிகம் ஆட்கொண்டவர்கள் இதுபோன்ற கதாபாத்திரங்களே..

அணிசொற்களை அழகுற அமைக்கும் அலுவலைத்தாண்டிய அரசுசூழ்தல்களின் சூத்திரதாரிகளாயிருக்கும் அமைச்சர்கள், அகத்தை அகற்றி அஃறிணைப்போல் அரசகுலத்திற்க்கு அடிபணியும் அணுக்க சேடிகள். யானையை பூனையாக்கும் சூதர்கள்.

பத்மை,ஊர்மை,சாயை,அனகை,மாயை என்று நீளும் அணுக்க சேடிகளின் பட்டியல்,

நான் காட்டுக்கு கிளம்புறேன், நீயும் கிளம்பி மச்சநாட்டுக்கு திரும்பி போய் நாம சின்ன வயசுல அங்க மீன் பிடிச்சி சந்தோசமா விளையாடுவோமே, அதேபோல விளையாடு..” என்று சொல்லிவிட்டு கானேரும் அஸ்தினபுரபேரரசி சத்யவதியை எந்த சஞ்சலமும் இன்றி பார்த்துநிற்க்கும் ஊர்மை.

திரௌபதியின் நிழலுருவாய் நிற்க்கும் மாயை, கர்ணனை வயிற்றில் கருக்கொண்ட நாள்முதல், மழைகொட்டும் நள்ளிரவில் மருத்துவச்சியை தேடி ஓடுவது முதல் “அடேய் மந்தா, வந்து ஒருவாய் சாப்பிட்டு போய்தொலையேன்…” என்று உரிமையாய் கடிந்துகொள்ளும் அனகைநாச்சியார் (ஆன அனகை).

அஸ்தினபுரியின் வடக்குமாளிகையில் எப்போதும் நிலைகொண்டிருக்கும் விதுரரின் தாய் சாயை. அரசகுல வாரிசை பெற்றெடுத்த பெருமையன்றி வேறெந்த சுகபோகங்களையும் அதன்பின் பெற்றிடாத சாயை. திருதிராஷ்டரின் இசைக்கூடத்தில் இசையரசியாய் அமர்ந்து யுயுத்ஸூ என்ற நூற்றிபதினொன்றாவது கௌரவ மைந்தனை பெற்றெடுத்தப்பின் சராசரி வாழ்க்கையை தொலைக்கும் பிரகதி.

அம்பையை திரும்ப அழைத்துச்செல்ல பீஷ்மர் தற்செயலாய் தேர்ந்தெடுக்கும் படகோட்டி நிருபன் (இந்த அத்தியாயத்தை வாசிக்கையில் நிருபன் என்ற பெயர் குகன் என்று மாறியிருப்பதைக் கண்டு “பாவம் அவரும் எவ்ளோ பேரத்தான் ஞாபகத்துல வச்சிப்பார்” மண்டையில் கணநேரம் வந்துசென்ற எண்ணக்கீற்றுக்கு அடுத்து வந்த குகர்களின் விவரணை நடுமண்டையில் ஓங்கி கொட்டுவைத்துகொள்ள வைத்தது).

சகுனியின் அனைத்து செயல்களுக்கும் பின்புலமாய் வலுப்பெறும் கணிகர்.

இருதலைக்கொள்ளி எறும்பாய் தவிக்கும் விதுரர்.

திருதிராஷ்டிரரை போலவே உருமாற்றுப்பெறும் விப்ரர்.

நாவல்கள் முழுவதும் தென்படும் அங்கத நடை.

பெரீந்தையே…..” என்ற கூக்குரலோடு கர்ணன் மேல் ஈசலாய் பற்றும் கௌரவ மைந்தர்கள். வெய்யோனில் நான் மிகவும் ரசித்து படித்த பகுதி. மழலைகள் உலகை உங்களின்  வேறு படைப்புகளில் படித்திருந்தாலும், வெண்முரசு மாந்தர்களினூடாக படிக்கையில் இனம்புரியாத மகிழ்ச்சி.

*************************************************

”வெண்முரசு புதிய முயற்சி அல்ல..” என்ற ரீதியிலான (இந்தியா டுடே நேர்காணலின் கேள்விக்கான உங்களின் பதிலின் ஒரு பகுதி)

வெண்முரசு மகாபாரதத்தை திரும்பச் சொல்ற படைப்பு இல்லை. மொழி பெயர்ப்பு கிடையாது. அப்படியே மறு ஆக்கம் செய்யுற முயற்சி கிடையாது. இது ஒரு நவீன நாவல். ..மகாபாரதத்தை நவீன நாவல் வடிவில் எழுதும்போது எடுத்து கொள்ள கூடிய எல்லா சுதந்திரங்களும் இருக்கு. கதாபாத்திரங்கள் விரிவாக்கப்பட்டிருக்கு ,கதை சந்தர்ப்பங்கள் விரிவாக்கப்பட்டிருக்கு,

*************************************************

 “அம்மாட்ட போகனும்..” என்று அழும் கௌரவ கடைக்குட்டி சுஜாதனை “சும்மா இருடா, இன்னும் ஒரு பத்து பதினைந்து வருசம் கழிச்சி நம்ம பிதாமகர் உனக்கு ஒரு நல்ல பொண்ணா பாத்து வருவார்”  கௌரவ- பாண்டவர்களின் காணாடுகையில் நகைப்பிற்குள்ளாகும் பீஷ்மர்.

இந்திரப்பிரஸ்தத்தில் நடைபெறும் ராஜசூய வேள்வியை ஆரம்பித்துவைக்க பீஷ்மரை அழைக்கையில் “நா அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன், கிருஷ்ணன் தான் அதுக்கு சரியான ஆள்…” என்ற தொனியில் கருத்துரைத்து கண்ணனை கோத்துவிடும் பீஷ்மர், இதனால் ஏற்ப்படும் அடுத்த கட்ட பிரச்சினையில் உயிர்துறக்கும் சேதிநாட்டு இளவரசன் சிசுபாலன்.

பன்னிருபடைகளத்தில் திரௌபதி சிறுமைப்படுத்தப்பட்ட சம்பவத்திற்க்குப்பின், தன்னை வந்து சந்திக்கும் துரியோதனனை நையப்புடைத்து “இந்த அடி உனக்கும் சேத்துதான், தூக்கிட்டு போ” என்ற ரீதியில் கர்ணனை மிரட்டும் பீஷ்மர்.

பீஷ்மர் என்று உச்சரிக்கையிலேயே ”பிதாமகர்” என்ற சொல் நம்மனதில் தானாய் எழுந்துவிடும், அந்த பிம்பத்தை இக்கோணத்தில் (இதுகாறும் தெய்வீக பிம்பம் சித்தரிக்கப்பட்டவர் “பொண்ணுதூக்கும்” வேலை செய்யும் ஒருவராய்) சிந்திக்க வைப்பதுதான் வெண்முரசின் பல வெற்றிக்காரணிகளில் ஒன்று. இதுவே நவீன நாவல் வடிவாக எழுதுகையில் எடுத்தாளப்பட்ட சுதந்திரம் என நினைக்கிறேன்.

[           

அந்த உருவகமும் ஒருவகையில் சரிதானே, அம்பை,அம்பிகை,அம்பாலிகையை தூக்கிவரத்தானே செய்தார்…

இதே சுஜாதன் வாலிபனானபின் அரசதூதுவனாக அங்கநாட்டிற்க்கு சென்று தனது கன்னி உரையை அரசவையிலாற்றுகையில், ”தம்மாதூண்டு இருந்தவன், அம்மாட்ட போகணும்னு அழுதவன் இன்னக்கி எப்படி வளந்து நிக்கிறான் பாரு” என்ற எண்ணம் எழுந்து நம் வாசிப்பனுபவத்தை மேலும் இனிதாக்கி செல்கிறது..

]

இடும்பனுக்கான நடுகல் பூமியின் அடியிலிருந்து பெயர்த்தெடுக்கப்படுவது. அடுமனையில் பித்தளை உருளிகள் அடுப்பிலிருந்து வெளியே எடுக்கப்படுவது, அடுகளைத்தை படுகளத்தோடு ஒப்பிட்டு பேசப்படும் உரையாடல்கள்.

நாணலில் கொண்டு செய்யப்படும் அம்புகளின் வகைகளை அலகுகளை கொண்டு வகைப்படுத்துவது.

மரவுரிஆடை தயார்செய்யப்படும், முறை.

பாஞ்சாலத்தில் திரௌபதியின் வரவேற்ப்பில் வில்லின் விசையை விளக்கும் குறிப்புகள்.

நாவல்கள் முழுதும் பரவிக்கிடக்கும் விவரணைகள்.

***********************************************************

நாவலை மட்டும் வாசித்தால்போதாதா? விமர்சனங்கள் நம்முடைய வாசிப்பைத் திசைதிருப்பிவிடாதா?  என்ற ஒரு வாசகர் கேள்விக்கான தங்கள் பதிலின் ஒரு பகுதி.

இலக்கியப்படைப்புகள் வாசகனும் பங்கேற்க அழைக்கின்றன. வாசகன் எழுத்தாளன் அளவுக்கே அந்த இலக்கியத்தை தானும் கற்பனை செய்து கொள்ள வேண்டியிருக்கிறது . வெண்முரசு நாவல்வரிசையில் சொல்லப்பட்டவை மிகக்குறைவு, வாசகனின் கற்பனைக்கும் சிந்தனைக்கும் விடப்பட்டவையே அதிகம். ஆகவே வாசகன் எந்த அளவுக்கு விரிகிறானோ அந்த அளவுக்கு அந்நாவல்கள் விரிவடையும்

அதற்குரிய வழிகளில் ஒன்றுதான் விமர்சனம். நாம் ஒருகோணத்தில் வாசித்திருப்போம். இன்னொரு வாசிப்பை விமர்சனம் மூலம் அறியும்போது நம்முடைய வாசிப்பு விரிவடைகிறது. பல கோணங்களில் பலர் முன்வைக்கும் வாசிப்புகளை நாம் அடையும்போது நமக்கு பல கண்கள் வந்ததுபோல. நாம் தவறவிட்டவை பல தெரியவருகின்றன. நாம் பார்த்தபார்வைக்கு மாறான பார்வைகள்கூட கிடைக்கின்றன

வெண்முரசின் உள்ளே மறைந்திருக்கும் நுட்பங்கள் பல. புராணங்கள், படிமங்கள் போன்றவை ஒரு பக்கம் [உதாரணம் ஸ்தூனகர்ணன் என்ற கந்தர்வனின் கதை]. வாழ்க்கைச் சந்தர்ப்பங்கள் இன்னொரு பக்கம் [உதாரணம் குந்திக்கும் அவள் சிற்றன்னைக்குமான உறவு] மொழியில் சுருக்கமாகவும் அடர்த்தியாகவும் சொல்லப்பட்டிருக்கும் வரிகள் இன்னொருபக்கம். உதாரணம் ‘மூத்தோரும் முனிந்தோரும் மூவைதிகரும் தீச்சொல்லிட உரிமைபெற்றவர்கள்’ போன்றவரிகள். கடைசியாக மகாபாரதத்தில் இருந்து விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கும் விஷயங்கள்

***********************************************************

தாலிப்பனை குறித்து படித்தபோது கண்ணில் பட்ட பனைமரங்களிலெல்லாம் அதன் குணாதிசயங்களை தேடியும்.பூம்புகாரின் வணிக விவரணைகளையும், நகரின் அமைப்பையும் படித்த அன்று மாலை காவிரி கடலில் கலக்கும் பகுதியில் கால்நனைத்தபடி பழைய பூம்புகார் எப்படி இருந்திருக்கும் என்ற கேள்விக்கு விடை தேடியபடி நெடுநேரம் நின்றிருந்ததும் வெண்முரசு வாசிப்பனுவத்தின் இனிய நினைவுகள்.

மிகப்பெரிய மனமாற்றத்தை உண்டுசெய்யும் தற்செயல் நிகழ்வுகள்.

கௌரவ- பாண்டவர்களின் காணாடுகையில் துரியோதனனை கரடியின் பிடியிலிருந்து காப்பாற்றும் பீமன், துரியோதனன் பீமனின் மேல்கொள்ளும் சினத்திற்க்கான முதல் காரணி.

பாண்டவர்கள் படைநகர்தலில் பெற்ற முதல் வெற்றியை கொண்டாட காத்திருக்கும் திருதிராஷ்டரிடம் செல்லாமல் வென்ற மணிமுடியை குந்தியின் தலையில் வைக்க, தேர்காலில் நின்றபடி நகர்வலம் வரும் குந்தி.

ஒரு எளிய நிகழ்வின் எதிர்விளைவுகளை களைய எடுக்கும் முயற்ச்சிகள், அதனை மீறிய தற்செயல் நிகழ்வுகள். “எக்கேடும் கெட்டு ஒழியட்டும்” என்று சோர்வுற்று அமரும் விதுரர்.

*************************************************

வெ.சுரேஷின் விமரிசன கட்டுரைக்கான தங்களின் பதிலின் ஒரு பகுதி.

இன்றைய வாசகன் அவன் அறிந்த மகாபாரதத்துடன் ஒப்பிட்டும் முரண்பட்டும் மேலெழுந்தும் தான் இதனுள் நுழைய முடியும்அதிர்ச்சிகள் ஒவ்வாமைகள் குழப்பங்கள் கூடவே புரிதல்கள்,கண்டடைதல்கள் பரவசங்கள் என்றே அந்த பயணம் நிகழமுடியும்இவ்வாசிப்பின் பயன்கள் அந்தப்பயணத்தில் நிகழ்பவை.

*************************************************

என்ன இருந்தாலும் அவ நம்ம மருமகள், அவள பாரட்ட எதுக்கு முறைமை பாக்கணும்” என்றெண்ணி இந்திரப்பிரஸ்தத்தின் பொன்றாப்பெருஞ்சுடர்  ஏற்றும்  பெருவிழாவில் திரௌபதியை நோக்கி விரையும் துரியோதனன், பின் நிகழும் தற்செயல் நிகழ்வுகளால் அஸ்தினபுரியின் பன்னிருபடைகள மாளிகையில் திரௌபதியை சிறுமைப்படுத்த காரணமாய் துரியோதனனின் மனதில் அமையும் வஞ்சினம். “சாப்பாடு தயார் போயி சாப்பிடலாமுன்னு ஜராசந்தன் கூப்டுகிட்டு இருந்தான், ஒழுங்கா சாப்பிட போகாம இவள பாக்கவந்து இப்படி அசிங்கப்பட்டு நிக்கிறானே.. பாவம்ன்னு”  துரியோதனைப்பற்றிய நமது கண்ணோட்டம் மாறும் இடம்.  நான் அறிந்த மகாபாரதம் மூளையில் கட்டமைத்திருக்கும் பாண்டவ கௌரவ பிம்பங்கள் முற்றாக அழிந்து அதிர்ச்சிகள் ஒவ்வாமைகள் குழப்பங்கள் கூடவே புரிதல்கள்,கண்டடைதல்கள் பரவசங்கள் அத்தனையும் இந்த வாசிப்பனுபவத்தில் ஒன்றுவிடாமல் நிகழ்ந்தது..

·      இளைய யாதவரின் தமயனாகிய அரிஷ்ட நேமியின் மணதேற்ப்பு நிகழ்வையொட்டி பாரதவர்ஷத்தின் பல்வேறு அரசகுலங்களில் இருந்து அனுப்பப்படும் வாழ்த்தோலைகளை சபையில் வாசித்தல்.

·      இந்திரப்பிரஸ்தத்தில் நடைபெறும் பொன்றாப்பெருஞ்சுடர் ஏற்றும் பெருவிழாவிற்க்கும் பின்னர் நடைபெறும் ஆரியவர்த்தத்தின் முதன்மைராஜசூய வேள்விக்கு வருகைதரும் அரசர்கள், சிந்துநாட்டு ஜெயத்ரதன், சேதிநாட்டு சிசுபாலன், உத்திர தட்சண பாஞ்சால அரசர்கள் துருபதன், அஸ்வத்தாமன்,மகதத்தின் ஜெராசந்தன். அவர்களுக்கிடையேயான நகையாட்டு உரையாடல்கள், பாரதவர்ஷத்தின் ஒட்டுமொத்த ஆதரவு,எதிர்ப்பு நிலைகளும் அங்கு உருப்பெறும் குழுக்களின் மூலம் வெளிப்படுதல்.

·      அம்பையின் ஆலயத்தின் அருகிலுள்ள நிருதனின் சிலைக்கு நடக்கும் பூசைகள்.

இவைமூன்றும் என் வாசிப்பின் திசையை , ஆழத்தை சுயபரிசோதனை செய்துகொள்ள, முந்தைய நிகழ்வுகளை மீட்டுக்கொண்ட இடங்கள்.

***********************************************************

தமிழ் இந்துவிற்கான நேற்க்காணல் ஒன்றின் கேள்வி – தங்களின் பதில்.

நவீன இலக்கியத்தைப் பொருத்தவரை பாரதியார்எம்.விவெங்கட்ராம் தொடங்கி எஸ்ராமகிருஷ்ணன் வரை மகாபாரதத்தை மறுபடைப்பு செய்திருக்கிறார்கள்உங்கள் மகாபாரதம் இதிலிருந்து எப்படி மாறுபடுகிறது

மகாபாரதத்தில் துரோணரை மட்டும் ஒரு கதாபாத்திரமாக்கி எழுதும்போது மற்ற கதாபாத்திரங்களுக்கு நியாயம் இருக்காது. கர்ணனை நாயகனாக்கி எழுதும்போது அர்ஜுனனைச் சிறிய கதாபாத்திமாக்கிவிடுவார்கள். இந்தப் பிழை நிகழாமல் மொத்த மகாபாரதத்தை எழுத வேண்டும் என்பதே எனது சவாலாக உள்ளது. வியாசன் எந்தக் கதாபாத்திரத்தையும் கீழே விடவில்லை. ஒருவனுக்கு நியாயம் சொல்லும்போது, இன்னொருவனை அநீதியாகக் காட்டாமல்  சொல்வது என்பது பெரிய சவால்.

***********************************************************

யக்ஞசேனனாக துருபதனோடு குருகுலத்தில் இருந்த துரோணர் அஸ்தினபுரியில் துரோணாச்சாரியாராக ஆகிறார். ஒரு பசுமாடு கேட்டு பாஞ்சாலத்திற்க்கு வருகையில் நடைபெறும் நிகழ்வுகள், அதன்பின்னான எதிர்வினைகள். துருபதனை தேர்காலில் கட்டி தன்னிடம் இழுத்துவரச்செய்யும் துரோணர். ஆசிரியரின் ஆணையை நிறைவேற்றியபின் குருநாதர் ஸ்தானத்திலிருந்து குரோதம் நிறைந்த சராசரி மனிதனாய்  அர்ஜூனன் மனதில் இறக்கம்பெறும் துரோணர்.

நண்பர்களோடு விவாதிக்கையில் நாம் கண்டறியாத பல கோணங்கள் கண்முன் விரிகிறது. ஊட்டி முகாமின் காலை நடையில் கிருஷ்ணனிடம் வெண்முரசு வாசிப்பனுவத்தைப்பற்றியே பெரும்பாலும் சிலாகித்து வந்தேன். துரோணரின் ”துருபதவதம்” பற்றி பேசிக்கொண்டிருக்கையில் “பாத்தீங்கன்னா, இதே சம்பவம் இந்திரநீலத்திலும் வரும்….” நடைவழி சரளைக்கற்களை கவனமாக தாண்டியபடி சிறு இடைவெளிவிட்டு “கிருதவர்மன்” என்றார். சமீபத்திய சாலைப்பயணம் ஒன்றிலும் வெண்முரசே பிரதான பேசுபொருள், “வெண்முரசுல குறிப்பிடத்தகுந்த அம்சமா நீங்க எத பாக்குறீங்க? என்ற கேள்விக்கு கிருஷ்ணனின் பதில் “தத்துவ தரிசனங்கள்”.

[

வழியில் ஒரு வேகத்தடை வந்தால் அருகிலொன்று அமைந்தே தீரும்..” அந்த பயணத்தில் கிருஷ்ணன் உதிர்த்த நவீன தத்துவ முத்து….

]

மெலட்டூரில் பாகவதமேளா பாக்க சென்ற தினத்தில் உற்சவமூர்த்தி வாகனம் ஒன்றை காட்டியபடி ராகவ் ”இதோட கைய பாருங்க மூதாதயர் கை போல பெரிசா இருக்கும்…”  “ஆமா, திருதிராஷ்ட்டிரர் கை போல…  ”விதுரா, மூடா………”ன்னு கூப்பிடுற மாதிரியே இருக்குல்ல” மெல்லிய சிலிர்ப்போடு முணுமுணுத்தது உதடு.

·      பூரிசிரவஸ் மற்றும் சாதுயகி பாத்திரங்கள். அவர்கள் இருவரும் முதல்முதலாய் சந்தித்துக்கொள்ளுதல்.

·      கணிகரும், இளைய யாதவரும் ஒருவரை ஒருவர் அறிதல்..

***********************************************************

நீங்கள் ஒரு நாவலுக்குள்ளேயே நாலைந்து மொழிநடைகளைக் கையாள்கிறீர்கள்பொதுவாக வெண்முரசின் நாவல்களைப்பார்த்தால் அவை ஒருபக்கம் ரியலிஸ்டிக் நெரேஷனுடன் இருக்கின்றனஇன்னொருபக்கம் ரொமாண்டிக் நெரேஷனுடன் இருக்கின்றனஇன்னொரு பக்கம் சிறுவர்களின்கதைகளின் சாகஸங்களுடன் இருக்கின்றனஇந்தத்தன்மையை என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லைஇதை எப்படி உள்வாங்கமுடியுமென்றும் தோன்றவில்லை.

மேற்கண்ட வாசகர் கேள்விக்கு தங்களின் பதில்.

வெண்முரசின் எல்லா நாவல்களிலும் பலநாவல்கள்ஒன்றுடனொன்று இணையாத முரண்படக்கூடிய ஏராளமான துணைநாவல்கள் உள்ளனஅந்தத் துணைக்கதைகள் மையக்கதையை எப்படி குறுக்காக வகுந்து செல்கின்றன , எப்படி மையக்கதையைச் சிதைவுறச்செய்கின்றன ,என்பதே அவற்றை என் நோக்கில் ஆழ்பிரதிகள் கொண்ட களமாக ஆக்குகிறது.

***********************************************************

மையக்கதைகளுக்கு இணையாக குறுக்கிடும் துணைக்கதைகள் முதற்கனல், மழைப்பாடல் படிக்கையில் ஒரு பதட்டத்தை கொடுத்தது,வெண்முரசில் ஊடுருவ ஆரம்பித்தப்பின் மனது கிளைக்கதைகளை எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டது.

பிரயாகை நாவலில் வாரணவத அரக்குமாளிகை தீ விபத்தில் பாண்டவர்கள் இறந்த செய்திகேட்டு கடுந்துயருற்றிருக்கும் திருதராஷ்டிரரை காண வருகிறார் பீஷ்மர். முகத்தில் எந்த உணர்ச்சியுமின்றிருக்கும் பீஷ்மரை நோக்கும் விதுரர், “இந்தாளு வேற, “நாம என்னப்பா பண்ண முடியும், எல்லாம் விதிப்பயன், நம்ம கைல என்ன இருக்கு” இப்படி ஏதாவது முறைமை சொல்லைச்சொல்லி எரியிற நெருப்புல எண்ணைய ஊத்தப்போறாரு… என்றரீதியில் கசந்து நிற்க, திருதராஷ்டிரரை மார்போடு இறுக்கியணைத்தபடி ”மல்லா..” என்ற ஒற்றை சொல்லால் திருதராஷ்டரின் துக்கத்தை வடித்தெடுக்கிறார் பீஷ்மர்.

திருதராஷ்டிரரை பீஷ்மர் அப்படி அழைத்து விதுரர் கேட்டதுமில்லைஅறிந்ததுமில்லைமற்போர் கற்றுத்தந்த நாட்களில் எவரும் அருகில் இல்லாதபோது அழைத்திருக்கலாம்.

அடுத்து வரும் வரிகள், மல்லாவை மையப்படுத்தி ஒரு துணைக்கதையை மனதுக்குள் உருவகம் செய்கின்றன. ஆரம்பத்தில் பதற்றத்தைக்கொடுத்தவை இந்த இடத்தில் கிளைபிரியாததால் ஒருவித ஏமாற்றத்தையே கொடுத்தது.

***********************************************************

முதற்கனல் குறித்து மரபின்மைந்தன் முத்தையாவின் விமர்சனத்தை மேற்க்கோள்காட்டி நீங்கள் குறிப்பிடுள்ள பதிலின் ஒரு பகுதி.

கதையை ஒட்டுமொத்தமாகப் பார்த்தாலும் சரி ஒரு பெரிய விதிவிளையாட்டுத்தான் தெரிகிறது. ஆனால் தனித்தனியாகப் பார்த்தால் ஒவ்வொன்றுக்கும் அந்த மனிதர்களின் ஆசாபாசங்களே காரணமாக இருப்பதும் தெரிகிறது. இதுதான் மகாபாரதத்தின் இயல்பு.

***********************************************************

”சியமந்தக மணி” கிருஷ்ணனின் மனைவியரிடமும், சத்ராஜித், பிரசேனர்  திருஷ்டத்யும்னன் ,கிருதவர்மன் மற்றும் துச்சளையிடம் ஏற்படுத்தும் விளைவுகளும் மிகச்சரியான உதாரணம்.

வெண்முரசு – விதைகளாகவும்,விளைச்சளாகவும் பல்கிப்பெருகி பரவசமடையச்செய்யும் நாற்றங்கால். பிறிதொன்றென ஆகாமல் எவரும் பிறிதெதையும் அடையவியலாது” விதர்ப்பத்தின்  சௌபர்ணிகை கரையில் தமனர் பாண்டவர்களுக்கு அளிக்கும் நற்ச்சொல்போல பிறிதொன்றாக ஆகாமல் வெறும் வாசிப்பிலும், கதை கேட்டலிலும் அதனை அடைதல் இயலாது.

நட்புடன்,

யோகேஸ்வரன் ராமநாதன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *