படிகளின் உயரம் எப்போதும் அளவோடு இருத்தல் வேண்டும். உயரம் அதிகமாக இருந்தால் ஏறுவதை தவிர்த்துவிடுவோம், குறைவாக இருக்கும் பட்சத்தில் தாண்டிச்சென்றுவிடுவோம். மோகன்குமார் வெற்றிக்கோடுகள் புத்தகத்தின் படிகளை சரியாகவே நிர்ணயத்திருக்கிறார்.
படித்து முடிக்காமல் வைத்திருக்கும் புத்தகங்களை முடித்த பிறகே புது புத்தகங்கள் வாங்க வேண்டும் என்ற விரதத்தை சற்றே தளர்த்த வைத்தது மோகன்குமாரும், சுரேகாவும். அடைமழையில் டிஸ்கவரி சென்று மோகனையும் சுரேகாவையும் பையில் அடைத்தபிறகும் மனசு அலைபாய,ஏ.கே.செட்டியாரும், சு.காவும், சு.ராவும்,க.நா.சுவும்,வண்ணநிலவனும் இடம் பிடித்துக்கொண்டார்கள்.
வீடு திரும்பியதும் கையில் எடுத்தது “வீடு திரும்பலின்” வெற்றிக்கோடு புத்தகத்தை. அதைப்பற்றி கொஞ்சம்….
புத்தக விபரம் :
வெற்றிக்கோடு
‘வீடு திரும்பல்’ மோகன்குமார்
அகவொளி பதிப்பகம்
விலை : 80 ரூ.
85 பக்கங்கள் (முன்னுரை மற்றும் முடிவுரை தவிர்த்து). 19 கட்டுரைகள். சட்டென்று ஆரம்பித்து சடுதியில் முடியும் எழுத்து நடை.
“உனக்கு புத்திமதி சொல்லுற அளவுக்கு நான் பெரிய அப்பாடக்கர் இல்லை, எனக்கு நடந்ததை,நான் பின்பற்றுவதை எழுத்தாக்கியிருக்கிறேன், இஷ்டமிருந்தா படி, இல்லாட்டி போயி புள்ளகுட்டிகள படிக்க வை” என்று முன்னுரையிலேயே முத்தாய்ப்பு வைத்திருக்கிறார்.(மோகனின் மைண்ட் வாய்ஸ் : நாங்கள்ளாம் எவ்வளவு பாத்திருக்கோம்!!!!!!!)
பெரும்பாலான கட்டுரைகள் நம்முடைய வாழ்க்கையை இடுப்பில் கேமிராவைக்கட்டிக்கொண்டு படம்பிடித்தது போல இயல்பாய்…
வெள்ளிக்கிழமை போட்டுக்கிற சட்டையை ( வியாழக்கிமை மழை வந்துட்டா என்ன பண்ணுறது??) புதன்கிழமையே சுவைச்சி ரெடி பண்ணி வைக்கிற முன் ஜாக்கிறதை முத்தண்ணா பார்ட்டி நான், சில கட்டுரைகளை படிக்கையில் சிரிப்பதை தவிர்க்க முடிவதில்லை.
புத்தகத்தில் பிடித்த சில பகுதிகள் :
“உங்கள் வாழ்க்கையின் சில பகுதிகளை நீங்கள் திரும்பி பார்க்கவும், உங்கள் வாழ்க்கைக்கு தேவையான ஒரு சில விஷயங்கள் கற்றுத்தரவும் செய்யுமானால் இந்த புத்தகம் தன் கடமையை செய்துவிட்டது என்று அர்த்தம்”.
“முதலில் ஒருவர் செய்த கண்டுபிடிப்பை அடுத்து மெருகேற்றியவர் முதலாம் நபரைவிட அதிக பிரபலம் ஆனது நடந்துதான் உள்ளது“.
படிக்கையில் சத்துணவு திட்டத்தை அமுல்படுத்திய காமராஜரும், அதனை பிரபலப்படுத்திய எம்.ஜி.யாரும் நினைவுக்கு வருகிறார்கள்.
“முக்கிய பொருள்களை எப்போதும் குறிப்பிட்ட இடத்தில் வைப்பதும் அங்கிருந்து தேவையான போது உடனே எடுப்பதும் மிகச்சிறிய, ஆனால் நம் நேரத்தை நிறைய சேமிக்கிற விஷயம்“.
நான் சிரத்தையுடன் கடைபிடிக்கும் விஷயம் இது. ‘பேக்கப் & கிளீனிங் ப்ராசஸ்’ அலுவகத்துக்கு மட்டுமல்ல,வீட்டுக்கும் சேர்த்துதான்.
நிறைமாத கர்ப்பிணி போல எப்போதும் காட்சியளிக்கும் பர்ஸிலுள்ள தேவையில்லாத விஷயங்களை நாம் கடைசியாக பிரித்தெடுத்தது எப்போது???
“மெடிக்கல் இன்சூரன்ஸ் எடுத்திருந்தால் உடல் கஷ்டத்தோடு இந்த பிரச்சினை முடியும் ( நான் இன்சூரன்ஸ் ஏஜன்ட் இல்லை என்பதறிக..)” “உனக்கேன் இவ்வளவு அக்கறை” என்று நாம் யாரும் கேட்டுவிடக்கூடாதல்லவா?
“வெற்றி பெற,முன்னேற,மகிழ்ச்சி கொள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் உரிமை உண்டு.அது நமக்கு மட்டுமே நடக்க வேண்டும் என நினைப்பது மூடத்தனம்.வாழ்க்கையும், வாய்ப்புகளும் அனைவருக்கும் போது.“
“உங்கள் குடும்பத்தார் வலி,கண்ணீர் உணராது நீங்கள் இமயமே தொட்டாலும் அதில் எந்த பயனுமில்லை.”
“கடவுளாலும் முடியாத விஷயம் ஒன்று உண்டு. நடந்ததை மாற்ற அவராலும் முடியாது! “
சில சிறு குறைகள் :
செல்ல அம்மாவிற்க்கு சமர்ப்பணம் செய்தவர், தாயாரின் பெயரையும் குறிப்பிட்டிருக்கலாம்.
“பதிவு” என்ற வார்த்தையை “கட்டுரை” என்று மாற்றியிருக்கலாம், பதிவர் அல்லாதவர்கள் புத்தகத்தை படிக்கும்போது சிறு குழப்பம் ஏற்படுகிறது. என்னிடமே மேற்கண்ட கேள்வி இருவரால் கேட்கப்பட்டது.
ஒரு சில எழுத்து பிழைகள் இருப்பினும் கட்டுரைகளின் சாராம்சம் அப்பிழைகளை புறந்தள்ளிவிடுகிறது.
*************************************************************
நீடாமங்கலத்துக்காரரின் மனதில் நீங்கா நினைவாய் நீண்ட நாட்களுக்கு நிலைக்கப்போகிறது இந்த (வெற்றி) கோடு.
சக பதிவராக, சக சோழமண்டலத்துக்காரனாக மோகனை வாழ்த்துவதில் ஒரு தன்னிறைவு ஏற்படுகிறது…
இன்னும் பல உயரங்கள் தொட வாழ்த்துக்கள் நண்பரே….
*************************************************************
“வெற்றிக்கோடு” – செட்டியார்கடை தேன்மிட்டாய்.
*************************************************************