தனது தந்தை செல்லியன் குடல் சரிந்து இறந்துபோக காரணமான வாடிபுரத்து சமஸ்தானத்து காளை ”காரி”யை அடக்குவதற்காக வாடிவாசலில் காத்திருக்கும் பிச்சி, செல்லியனின் வீரதீரபிரதாபங்களை அவரின் மகனென்று தெரியாமல் பிச்சியிடமே விவரிக்கும் உள்ளூர்கார கிழவர்.
முதலாவதாய் திட்டிவாசலை தாண்டி ஜல்லிக்கட்டை தொடங்கிவைக்கும் செல்லாயி கோயில் காளை, இருபுறமிருந்தும் பாய்ந்து அணையவருபவர்களை சீரி, திமிலை சிலிர்ப்பியபடி ஆற்றுமணல் நோக்கி ஓட்டமெடுக்கும் காளைகள்.
அணைமரத்தோடு நெஞ்சணைத்து “காரி”யை எதிர்பார்த்தபடி பிச்சி, மச்சானின் எண்ணம் நிறைவேற தோள்கொடுக்க அருகில் மருதன். பிச்சியின் உறுதியை குலைக்கும் வகையில் கேலிசெய்து கொண்டு எதிர்புறம் நிற்க்கும் முருகன்.
“காளைய அணைச்சி ரெண்டுபவுன் சங்கிலியையும் உருமாபட்டயயும் உருவாம இவ வூரு போயி சேரமாட்டா போலருக்கே” என்று நினைத்தபடி பதட்டத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல் வேடிக்கைபார்த்துக்கொண்டிருக்கும் வாடிபுரத்து ஜமீன்.
61 பக்க குறுநாவலில் மாடுபிடி நிகழ்வையும் அதனை சுற்றி நடக்கும் சம்பவங்களையும் விவரித்திருக்கும் விதம் அரை நூற்றாண்டு கடந்தும் வசீகரிக்கிறது.
”ஜல்லிக்கட்டு நடக்காததுனால நாங்கள்ளாம் ரொம்ப அப்செட்டா இருக்கம், கவர்மண்ட் இந்த பிரச்சினைய ஃபாஸ்ட்டா சால்வ் பண்ணணும்….” கேமரா லென்ஸை கூச்சத்துடன் பார்த்தபடி வருத்தத்தை வரவழைத்து பேசும் 20 வயது இளைஞன்.
எதோ ஒரு சேனலில் ஜல்லிக்கட்டு சம்மந்தமாக நடைபெறும் விவாதத்தை அசுவாரஸ்யமாய் கடந்து போவது மட்டுமே வரும்காலங்களில் நமக்கு கிடைக்கும் வாய்ப்பாக இருக்கும்…..
{{ ரொம்ப வருஷமா எங்கூருக்கு பக்கத்துல காணும்பொங்கலன்னைக்கி நடந்துகிட்டு இருந்த மாட்டுவண்டி பந்தயத்தயும் இந்த வருஷத்திலருந்து நிப்பாட்டிப்புட்டாங்க…………. }}
———-
வாடிவாசல்
சி.சு.செல்லப்பா
காலச்சுவடு பதிப்பகம்
ரூ. 70