மொழிப்பெயர்ப்பு கதைகளையும், பேட்டிகளையும் படித்திருந்தாலும், ரயில் வண்டியின் மேல் நீண்டநாட்களாக ஒரு கண் இருந்தது. காலச்சுவடில் முத்துலிங்கத்தின் மூன்று புத்தகங்கள் இருந்தாலும் ஆசையோடு எடுத்தது மகாராஜாவின் ரயில் வண்டியை. எதிர்பார்ப்பு நிறைவேறியதா என்றால் பெருமூச்சையே பதிலாக கொடுக்கலாம்.
புத்தக தலைப்பில் ஆரம்பித்து மொத்தம் இருபது சிறுகதைகள். ”லாஜிகல் எண்ட்” என்ற வார்த்தை அ.முத்துலிங்கம் அவர்களுக்கு எட்டிக்காயாய் கசக்கும் போல, பாதியில் ஆரம்பித்து படக்கென்று முடியும் கதைகள். ஒரு மென்சோகம் அனைத்து கதைகளிலுமே இழையோடுகிறது. கதாப்பாத்திரங்கள் பெரும்பாலும் அகாலத்தில் கொடூர கனவுகாண்கிறார்கள், அவர்களின் கனவுலகமும் நிஜவுலகமும் இருவேறு எல்லைகளை கொண்டபடியே இருக்கிறது.
”டே லைட்” சேவிங் முடிவுற்றதனலால் ஏற்பட்ட நேரமாறுதலை கிரகித்துக்கொள்ள தவறியதால் வயதானவர் ஒருவர் கிரீன் கார்டுக்கான நேர்காணலுக்கு தாமதமாக செல்ல நேரிடுகிறது. கடிகாரத்தின் முட்களை ஒரு மனித்தியாலங்கள் முன்னோக்கி நகர்த்திக்கொள்ள வேண்டும் என்ற விசயத்தை தன் மகனும், மருமகளும் தனக்கு சொல்ல மறந்ததையும், அக்கணத்தில் அமெரிக்க அரசாங்கம் உள்ளிட்ட உலகமே தனக்கு எதிராக செயல்படுவதாகவும் கற்பனை செய்துகொள்ளும் கதாபாத்திரம் “கடன்” சிறுகதையில்.
தட்டுமுட்டுச்சாமான்களுடன் அன்புக்காக ஏங்கியபடி நிலவறையில் நித்திரையின்றி புரண்டுகொண்டிருக்கும் முதியவர். “திங்கள்” ,”செவ்வாய்” என எழுதப்பட்ட சாப்பாட்டு பொட்டலங்கள் புதன்கிழமையன்றும் பிரிஜ்ஜில் தங்கியிருப்பதை வைத்தே அப்பாவின் இறப்பை தெரிந்துகொள்ளும் மகன்.
தொகுப்பில் ஆகச்சிறந்த சிறுகதையாக எனக்கு பட்டது “கடன்”.
மதிப்பில் குறைவான 5 சென்ட் நாணயம் 10 சென்ட் நாணயத்தைவிட அளவில் பெரியதாக இருப்பதை பற்றி வெகுநேரம் சிந்திக்கிறார் ( ஆமா, என்ன மாதிரியான டிசைன் இது???).
“கொம்புளானா” : எந்த இடத்தில் “ல” போடவேண்டும் எங்கே “ள” போட வேண்டுமென்று விளக்குவதை வைத்து கதை தொடங்குகிறது. ”இங்கிலீஷ் விங்கிலீஷ்” ஸ்ரீதேவியை கொண்டிருக்கிறது “கொம்புளானா” கதையில் வரும் பத்மாவதி பாத்திரம்.
”மாரியோ ங்கோமா” என்ற அமெரிக்கர் ஸ்பெயின் தூதரகத்தின் வேலைக்கான நேர்காணலை ராகுகாலம் காரணமாக தவிர்த்துவிடுகிறார், ஏன் என்பதற்கான பதில் “ராகுகாலம்” கதையில். ”எப்படி நம்மவீட்டு ஆளுங்க என்னென்னக்கி எப்போ ராகுகாலம்னு கரெக்டா ஞாபகம் வச்சிருக்காங்க” அப்படிங்கிற அங்கலாய்ப்பை கதையில் சொல்லப்பட்டிருக்கும் ஷார்ட் கட் மூலம் சரிசெய்துகொள்ளலாம்.
நாளை வழங்கப்பட இருக்கும் சூப்பில் கட்டாயம் இறைச்சி இருக்கும் என்று அனுதினமும் நினைத்தபடி அகதிகள் முகாமில் தூங்கச்செல்லும் இரு சிறுவர்களைப்பற்றிய கதை “நாளை”.
மீதமுள்ள கதைகள் மனதில் அவ்வளவாக ஒட்டவில்லை.
“மகாராஜாவின் ரயில் வண்டி” : வேறு எக்ஸ்பிரஸ்கள் கிடைக்காதபோது ஏறிக்கொள்ளலாம்.
———————-
மகாராஜாவின் ரயில் வண்டி
அ.முத்துலிங்கம்
காலச்சுவடு பதிப்பகம்
ரூ. 125