2011 வருடத்தில் தேடி அலைந்து, டிஸ்கவரி வேடியப்பனிடம் பார்க்கிறபோதெல்லாம் “தல எப்படியாவது உசார் பண்ணுங்க” என்று சொல்லிவைத்து. கடைசியில் அவரும் கைவிரிக்க அவ்வருட புத்த கண்காட்சியில் தமிழினி ஸ்டாலில் விசாரிக்க, “ஒரே ஒரு காப்பி இருக்கு சார், இருங்க எடுத்து தரேன்” என்று மேஜைக்கடியில் குனிந்தவர்,என்னைப்பார்த்தவாறு எழும்போதே எனக்கு நிலவரம் தெரிந்துவிட்டது.
“கடல்லியே இல்லியாம்” என்று சொல்லப்பட, கடைசி சான்ஸாக கண்மணி குணசேகரனிடமே தொலைபேசியில் விசாரிக்க “அத்த ஏ கேக்குரீங்க தம்பி,எங்கிட்ட மிச்ச இருந்ததே மூணு காப்பி, அதயுங்கொண்டுபோயி விஷ்ணுபுர இலக்கிய வட்டத்து சந்திப்புல காலிபண்ணிட்டு வண்டேன், ரெண்டாம் பதிப்பு போடறாங்க,சீக்கிர வந்திரும், வாங்கிக்கிங்க…” என்று தேடலுக்கு தற்காலிக முற்றுப்பபுள்ளி வைத்தார், இருவருடங்கள் கழித்து இப்போது கையில் கிடைத்திருக்கிறது. மூணரை வருஷமா பட்டியலில முதலிடத்தில் இருந்தது போனவாரம் தான் நீக்கம் செய்யப்பட்டது…. சரி, விசயத்துக்கு வருவோம்…
தமிழரசன்,ஏழைமுத்து,அய்யனார். ஒப்பந்த பணியாளர்களாக விருத்தாசலம் பெரியார் போக்குவரத்து கழக பணிமனையில் வேலைக்குசேரும் இம்மூவரின் பார்வையில் விவரிக்கப்பட்டு இருக்கிறது நாவல். வெவ்வேறு சூழ்நிலைகளில் இருந்து வந்து சேர்ந்திருந்தாலும் காலப்போக்கில் அவர்களிடையே உருவாகும் நேசம், அவரவர்தம் வாழ்க்கையில் நடந்த/நடக்கும் சம்பவங்கள் என நம்மை நாவலினுள் விரைவாக இட்டுச்செல்கிறது குணசேகரனின் எழுத்து.
சியெல்லாக பணிமனைக்குள் நடத்துனர்,ஓட்டுனர்,தொழில்நுட்ப பணியாளராக அடியெடுத்து வைக்கும் தமிழரசன்,ஏழைமுத்து,அய்யனார் எப்படி ஆரம்பத்தில் தலைகால் புரியாமல் அல்லாடுகிறார்களோ அதேபோல் பணிமனையின் வேலை சார்ந்த பயன்பாட்டு சொற்கள் நமக்கும் புரியவில்லை.
பக்கங்கள் செல்லச்செல்ல “யாருப்பா இன்னக்கி நைட்டு ஷிப்டு டெக்னிகலு,23ல கட்டு ஒடஞ்சிருக்குன்னு லாக் சீட்டுல எழுதி வச்சிட்டு போயிருக்காரு டிரைவரு, காலைல 4.40க்கு செட் அவுட்டு, அதுகுள்ளார மாத்திவுட்டுடுங்க” படிக்கும் நாமே ஏயினுடைய வேலையை பார்க்க ஆரம்பித்து விடுவோம.
ஒப்பந்த தொழிலாளர்களாய் இருக்கும் அவர்கள் மூவரும் படும் அவஸ்தைகளை ( தமிழினி “பாடுகளை” என்று எழுதிவைத்திருக்கிறது, புத்தகத அறிமுதத்தில் ) நம் கண்கொண்டு பார்க்கும்படியான எழுத்து நடை.
குணசேகரன் தான் ஒரு தொழிநுட்ப பணியாளராய் பணிபுரிவதால் விவரணைகளை மிக நுட்பமாக கையாண்டிடுக்கிறார்.
லைசன்ஸை திரும்ப பெற்றுச்செல்ல பணிமனைக்கு வரும் தமிழரசனும்,ஏழைமுத்தும் எதிர்பாராவிதமாக டூட்டி கொடுக்கப்படுவதும், கோணங்குப்பத்திலுருந்து சென்னைக்கு ஸ்பெஷல் வண்டியாக திருப்பிவிடப்படும்போதும், காயலான்கடைக்கு (கண்மணியின் எழுத்தில் “டவுன் கன்வர்சனுக்கு”காக வந்த, புஷ் ஸ்டார்ட் பொசிஷனில் உள்ள) செல்ல வேண்டிய வண்டியை குலசாமியை வேண்டிக்கொண்டே ஏழை உருட்டிசெல்லும் போதும் நம்மனதும் சேர்ந்து பயணிக்கிறது.
சென்னை பயணவழியில் வரும் மிலிட்டரி மேன் மற்றும் அவரது மகள் பாத்திரங்கள் கதையில் அவ்வளவாக ஒட்டவில்லை.
பஸ் விருத்தாசலம் டூ கோணாங்குப்பம் டூ சென்னை வந்திருச்சே, போறவழியில “வான்ட் ஆப் டீசல்” ல நின்னுட போகுதே என்னும் பதைபதைப்பு ஏழை, தமிழோடு சேர்த்து நமக்கும் வருகிறது.
கூட்டாளிகள் இருவருக்காக பணிமனையில் பதட்டத்தோடு காத்திருக்கும் அய்யனார், ரியர் ஜாய்ண்டோடு 0064 வண்டியை தேடி சென்னை ரோட்டில் சென்று சந்திப்பதாக கதைமுடிகிறது.
சியெல் வேலை இன்னும் சில நாட்களில் நின்றுவிடும்.வாழ்க்கை மீண்டும் தொடங்கும் என்ற நம்பிக்கையோடு பழுதாகி நின்றுகொண்டிருக்கும் 0064 நோக்கி செல்கிறார்கள் மூவரும். நீண்டு கிடக்கும் கருப்பு ரிப்பனாய் “நெடுஞ்சாலை”.
சமீகமாக படித்தவற்றில் “ஆகா முடிந்துவிட்டதே” என்று ஏங்க வைத்த நாவல். குணசேகரன் அவர்களை கண்டிப்பாக அழைத்து பேச வேண்டும்.
——————————————————————————————-
புத்தக விபரம்:
நெடுஞ்சாலை
தமிழினி பதிப்பகம்
ரூ. 290.