காலயெந்திரத்திலேறி சென்று கதாபாத்திரங்களோடு ஒன்றிவிடச்செய்யும் தி.ஜா வின் வசீகர எழுத்து மற்றும் சொல்லாடல்கள்…
கதை,கதாபாத்திரங்கள்,கால சூழ்நிலைகள் (முதற்பதிப்பு 1968) இம்மூன்றையும் ஒரு புள்ளியில் இணைத்து அதை நேர்கோடாக நாவலின் தொடக்கம் முதல் முடிவு வரை கொண்டுசெல்வதென்பதை நினைத்து பார்த்தாலே மூச்சு முட்டிக்கொண்டுவருகிறது (தி.ஜாவின் பாணியிலே).
”’உடனே புறப்பட்டு வரவும்,அவசரம்.’ தந்தி அடிக்கிறவர்கள் செய்தியை ஒரு கோடி காட்டினால் தான் என்ன? மனிதர்களை கலக்குவதற்காகவே இப்படி ஒரு கருவி,அதற்கு ஒரு இலாகா, அதற்க்கு இத்தனை ஆட்கள்!”
மனிதர்களை 24/7 அந்நிலமையிலேயே வைத்திருக்கும் தற்ப்போதைய தொழில்நுட்ப விஷயங்களை தி,ஜா எவ்வாறு கையாண்டிருப்பார்??
”ரத்தத்தை கொதிக்க வைக்கும் மனிதர்கள்,சொற்கள்,நிகழ்ச்சிகள் என்று பலவற்றை பற்றி புவனாவிடம் சட்டநாதன் சொல்லிக் குமுறியதுண்டு. அவள் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு, அவனோடு சற்றுக் குமுறுவது போலவும் அழுவது போலவும் செய்துவிட்டுக் கடைசியில் அன்று சொன்ன மாதிரி ஒரு அற்ப விஷயத்தைச் சொல்லிச் சிரிப்பில் கொண்டு முடித்துவிடுவாள்”.
1968 – 2015 எக்காலத்துக்கும் எல்லாருக்கும் பொருந்தக்கூடிய விஷயமல்லாவாவிது!!!
”இடக்கரடக்கல்” – நாவலின் ஒரு இடத்தில் கோடிட்டுக்காட்டப்படும் சொல். கமலஹாசனும் தி.ஜாவைப் படிப்பார் போல…
“அசிகை” – முதல் முதலாய் கேள்விப்படும் ஒரு சொல்லாடல்.
“பெரிய உடம்பு. மாநிறம். உடம்புக்கேற்ற பெரிய தலை. மொட்டைத்தலை. உடம்பெல்லாம் விபூதிப்பட்டை. கழுத்தில் ஒரு ருத்திராட்சை மாலை. இடையில் செங்கல் பார்டரில் ஒரு ஜரிகை வெண்பட்டால் கச்சம். ஒரு கட்டம் போட்ட சிவப்பு பட்டை இடையில் சுற்றியிருந்தது.வெறும் உடம்பு, ரோமம், மச்சம் ஏதுமின்றித் திருநீறும் சந்தனமுமாகச் சுருக்கமின்றிப் பளபளத்தது. நடு வயதைக் கடந்ததாலோ என்னவோ தசை மட்டும் சற்று எலும்பை விட்டுக் கட்டு கழன்றிருந்தது. லேசாகத் தொந்தி. காலிலும் கையிலும் நீள நீளமாக விரல்கள். பெரிய நகங்கள்”.
உருவத்தை உருவகப்படுத்தும் வார்த்தை ஜாலம்.
நாவலை எவ்வாறு படிக்கவேண்டுமென்று பா.ரா ஒரு விளக்கமே கொடுத்திருக்கிறார்….
http://www.writerpara.com/paper/?p=10497
“நீங்கள் எப்போதாவது வைக்கோல் போரில் சாய்ந்தபடி சுந்தர ராமசாமியின் கதைகளை வாசித்ததுண்டா? அபாரமாக இருக்கும். இதே ஜானகிராமனைப் படிப்பதற்கு ஏற்ற வாசனை, அழுக்குப் போர்வையில் கிட்டும். உள்ளதிலேயே அழுக்கான, பழைய போர்வை ஒன்றைப் போர்த்திக்கொண்டு, கொட்டும் மழை நாளில் செம்பருத்தி வாசித்தால் சோறு தண்ணி வேண்டியிருக்காது. அச்சிட்ட எழுத்துகள் ஒவ்வொன்றும் போர்வையின் வாசனையை உறிஞ்சி நாசியை நோக்கிப் பீய்ச்சும். கதை புத்திக்குள் இறங்கும்போது போர்வையின் கதகதப்பு உருவாக்கியிருக்கும் வியர்வைப் பிசுபிசுப்பும் வாசனையாக உருப்பெற்று ஒரு நெடியை உருவாக்கும். ஆ, அபாரம். விவரிக்கவே முடியாது அதை”.
(வைக்கோல் போர் இருந்த இடம் இப்போது கார்ஷெட் ஆகிவிட்டபடியால் எனக்கு அழுக்கு போர்வை மட்டுமே, கூடவே எங்கள் வீட்டு செம்பருத்தி மரமும்).
—————
செம்பருத்தி
தி.ஜானகிராமன்
காலச்சுவடு
விலை :400 ரூ
—————