கிறுக்கல்கள் : 25-09-2011

எங்கேயும் எப்போதும்.
எங்கே நடந்தாலும் எப்போதும்போல நாம் கடந்துபோகும் வாகன விபத்தை மைய்யப்படுத்தி திரைக்கதை அமைத்ததற்க்கு இயக்குனர் சரவணனை பாராட்ட வேண்டும்.
A.R.முருகதாஸ்/ஃபாக்ஸ் ஸ்டூடியோ தயாரிப்பில் புதுமுக இயக்குனர் ஒருவர் இயக்கிய படம் என்று மட்டும் நினைத்திருந்த நான் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில்
தற்செயலாக இயக்குனர் சரவணனை பார்க்க சற்றே இன்ப அதிர்ச்சி… அட நம்ம சரவணன்….
சற்றே பின்னோக்கி 2003ம் வருடத்திற்க்கு….
சென்னை அசோக் நகர் – 7வது அவென்யூ: நடன இயக்குனர் லலிதா-மணி தம்பதியருக்கு சொந்தமான அபார்ட்மெண்ட் முதல் தளம். A.R.முருகதாஸ் அஜீத்தை வைத்து இயக்கும் புதுப்படத்திற்கான கதை விவாதம் நடந்துகொண்டிருந்த சமயம். நான் வேலை பார்த்த கம்பெனி 2வது மாடியில். A.R.முருகதாஸின் அசிஸ்டெண்டுகளில் சரவணன் ஜூனியர். எப்போதும் சாந்த சொரூபியாய் அலுவலக வரவேற்பரையில் அமர்ந்திருப்பார். கடந்துபோகும் எங்கள் அலுவலக சகாக்களைப்பார்த்து ஒரு பரிச்சய புன்னகை…

எங்கள் அலுவலகம் மைலாப்பூர் பகுதிக்கு மாற்றப்பட, பிரிதொரு சந்தர்ப்பத்தில் A.R.முருகதாஸின் மற்றுமொரு அசிஸ்டெண்ட் டைரக்டரை சந்திக்கையில் அஜீத்தை வைத்து இயக்க திட்டமிடப்பட்ட படம் டிராப் ஆகிவிட்டதாகவும், அலுவலகத்தையும் மாற்றிவிட்டதாகவும்
தெரிவித்தார்.

எட்டு வருடத்திற்கு பிறகு அவரிடமிருந்து இதுபோன்றதொரு படம் உருவாகும் என்று முருகதாஸ் கூட நினைத்திருக்க வாய்ப்பில்லை…


படத்தில் பல காட்சிகள், வசனங்கள் நச்.
குறிப்பாக,
ஜெய் பயணம் செய்யும் பேருந்து பழுதடைந்துவிட, சரி செய்தபின் கண்டக்டருக்கு கை கழுவ ஜெய் உதவும் காட்சி(பேருந்து பழுதடைந்தால் உடனே இறங்கி ஜிப்பை கழட்டிக்கொண்டே புளியமரத்தை தேடும் நமக்கு அந்த காட்சி சற்றே வித்தியாசம்).
அனன்யாவின் அக்கா பேசும் வசனம் ”இதயே என் வீட்டுக்காரு செய்திருந்தாருன்னா இன்னும் பதினைந்து வருசத்துக்கு ‘ஒன்னொட சித்திப்பொண்ணால எனக்கு ஒரு நாள் லாஸ் ஆஃப் பே’ன்னு சொல்லிக்கிட்டே இருப்பார். நிஜத்தில் சொந்த பந்தங்களிடம் பலமுறை கேட்ட அனுபவத்தால், தியேட்டரில் கொஞ்ச நேரம் சிரித்துக்கொண்டே இருந்தேன்.
படம் முழுதும் வியாபித்திருக்கும் அஞ்சலியின் அட்டகாசம், தியேட்டரை விட்டு வந்தும் நினைவை விட்டு அகல மறுக்கிறது.
எனக்கு தெரிந்த வரையில் தமிழில் வாகன விபத்தை இத்தனை விலாவரியாக திரைப்படுத்தியதாக தெரியவில்லை… வாகன ஓட்டிகளுக்குள் ஒரு அதிர்வலையை நிச்சயமாய் உண்டுபண்ணுகிற படம்.
கொசுறு : சரவணன், ரமணா திரைப்படத்தில் விஜயகாந்த் கல்லூரியில் கைது செய்யப்படும் காட்சியில் வகுப்பறைக்குள் மூச்சிரைக்க ஓடிவந்து மாணவர்களிடம் கைது தகவலை சொல்லும் மாணவத்தலைவன் பாத்திரத்தில் நடித்திருப்பார்.
கால் கிலோ கருப்பு புளி.
ஏர்டெல் சூப்பர் சிங்கர் (பயப்படாதீங்க, நடந்து முடிந்த ஃபைனலை பற்றி மொக்கைப் போடப்போவதில்லை…) ஜூனியர்-3 க்கான விளம்பரம். இரண்டு மூன்று வித்தியாச ஸ்கிரிப்ட்டில் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தாலும், விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் விளம்பரம்.
கால்கிலோ கருப்பு புளியும் மஞ்சள்தூளும் வாங்க கடைக்கு செல்லும் சிறுவனின் சேட்டைகள். ஒவ்வொரு வீட்டிலும் அச்சிறுவனைப்போல் ஒரு வாண்டு கண்டிப்பாக இருக்கும். அடுத்த முறை எப்போ போடுவார்கள் என்று எதிர்பார்க்க வைக்கும் விளம்பரம்.
50 ரூவா.
நாலு இஞ்ச் பைண்டிங் நோட்டில் அரை கிறுக்கலாய் எழுதி, வாங்கிய காசை பத்திரப்படுத்தியதும் பேப்பரை கிழித்து எறியும் வாய்ப்பு நம்மூர் போலீஸிக்கு இனிமேல் வாய்க்காது போல… மீனம்பாக்கம் ஏர்ப்போர்ட் சிக்னலில் பச்சை விளக்குக்கு பணிந்து விருட்டென்று கிளம்பி செல்ல எத்தனிக்கயில் காரை ஓரங்கட்ட சொன்னார் டிராபிக் கான்ஸ்டபிள். கிரெடிட் கார்ட் ஸ்வாப்பிங் மெஷின் போல் இருந்த கையடக்க பொட்டியில் கார் நம்பரை தட்டி, மளிகை கடை லிஸ்ட் போன்ற பேப்பரை கையில் கொடுத்து “ சார், ஃபைன் ரிசிப்ட் ஒரு நாள்தான் வேலிடிடி. நம்பர் பிளேட்டை சீக்கிரம் மாத்துங்க” என்றபடியே நகர்ந்தார். விவாதத்திற்க்கு தயாரான என்னை சற்றே ஆச்சரிய படுத்தியது அந்த மளிகை கடை லிஸ்ட்.
நாளைக்கு முதல் வேலயா பாக்கெட்டுல 50ரூவா மறக்காம எடுத்து வச்சிக்கனும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *