இந்த சம்மரில் உடைத்த மொத்த கூலிங்கிளாஸ் எண்ணிக்கை : 4. ஒவ்வொரு முறையும் வாங்குவதும் சட்டைப்பட்டனில் மாட்டி கீழேவிழுந்து சடுதியில் உடைவதுமாய் இருந்தது. ஐந்தாவதாக வாங்கியது ஃபைபர் கிளாஸ். வாங்கியதிலிருந்து நேற்றுவரை குறைந்தது 10 தடவையாவது கீழே விழுந்திருக்கும். ஃபைபர் என்பதால் உடையவில்லை.. மாறாக இடது வலது கண்ணாடிகள் முறைவைத்து கழண்டு விழும். சரி செய்ய அருகில் இருக்கும் கண்கண்ணாடி கடையில் நுழைந்துவிடுவதுண்டு. காரணம் ????? இதுவரை எந்த கடையிலும் சர்வீஸ் சார்ஜ் வாங்கியதில்லை…
சென்னையில் பல இடங்களிலும், மயிலாடுதுறையில் இரு முறையும் சரிசெய்து கொண்டேன்.
கொஞ்சம் ஆச்சரியம் தான்… பொதுவாக ஒரு கடையில் பொருள் வாங்கும்போது வாடிக்கையாளரை தக்கவைத்துக்கொள்ளும் பொருட்டு இது போல ஃப்ரீ சர்வீஸ் செய்து கொடுப்பார்கள். ஆனால் எந்தக்கடையில் வாங்கியதாக இருந்தாலும் கண்ணாடிக்கு சர்வீஸ் சார்ஜ் வாங்குவதில்லை… ஏன்??? தெரிந்தால் சொல்லுங்களேன்….
குரோம்பேட்டை MIT மேம்பாலத்தை வழக்கம்போல் வாகனங்களை முந்திக்கொண்டு கடக்கையில் தென்பட்டது எதிரே கிராஸ் செய்த ஒரு டெம்போ டிராவலர் “நயிநார் டிராவல்ஸ்” என்ற முகப்போடு… அடடா.. என்ன ஒரு தமிழ் ”படுத்து”தல்.சொன்னவருக்கு தெரியவில்லையேனில் எழுதியவருக்காவது தெரிய வேண்டாமா???
(மாயவரத்தில் “பாப்புலர் டிஜிட்டல் பிரஸ்” என்று ஒரு அச்சகம் இருக்கிறது. இங்கு அச்சடிக்கப்படும் அனைத்து வாசகங்களும் அச்சக ஓனர் படித்துப்பார்த்த பிறகே அச்சுக்கு அனுமதி அளிக்கப்படும். கொடுக்கின்ற காசில் முன்னபின்ன இருந்தாலும் அட்ஜட் செய்துகொள்ளும் அவர் , பிரசுரிக்கப்படும் வாசகங்களிலோ/எழுத்திலோ அச்சக பணியாளர்கள் பிழை செய்திருந்தால் ருத்ர தாண்டவம் ஆடிவிடுவார், ஒரு முறை தமிழ்நாடு அரசின் முத்திரையை ஒரு ஃப்ளக்ஸ் பேனரில் போடச்சொன்னதற்க்கு இந்த மாதிரி விசயங்களுக்கு அரசு முத்திரையை போடக்கூடாதுன்னு கடைசிவரை மறுத்துவிட்டார்.)
”அங்கிள், உங்க அம்மாவ இன்னக்கி விஷ் பண்ணீங்களா???” முன்னிரவில் சந்தித்த நண்பர் ஒருவரின் 8 வயது மகள் கேட்க, அவளே அன்னையர் தினத்தைப்பத்தியும் தான் அம்மாவை விஷ் பண்ணியதையும் தொடர்ந்துகொண்டிருந்தாள். ரசத்தில் பெருங்காயத்தை கொஞ்சம் அதிகமா போட்டதற்க்காக கடிந்துகொண்டே மதியம் சாப்பிட்டது நினைவிற்க்கு வந்தது…..
(அன்னையர் தினத்தைப் பற்றிய சுவாரஸ்யமான கதை ஒண்ணு உண்டு….. வருடம் முழுதும் தங்களுக்காக வீட்டில் சுழலும் அம்மாவை அன்னையர் தினத்தன்று சந்தோசப்படுத்த முடிவு செய்து இரவு முழுவதும் பயண ஏற்ப்பாடுகள் செய்கிறார்கள், அம்மாவோ கஷ்டப்பட்டு எல்லாருக்கும் சாப்பாடு தயார்செய்து விட்டு அசதியில் தூங்கிவிடுகிறார்… விடிந்து பார்த்தால் வீட்டில் யாரையும் காணோம், எல்லோரும் அன்னையர் தினத்தை கொண்டாட சென்றுவிட்டார்கள்…)
பலரது வீட்டில் இப்படித்தான் அன்னையை கொண்டாடி வருகிறோம், எங்கள் வீடு உள்பட…
ஜெயா டிவியில் நேற்று மாலை ”கண்ணாடி” என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகையில் தமிழருவி மணியனின் குரல் கேட்டு ரிமோட்டுக்கு சற்று ஓய்வு கொடுத்தேன்… சுதந்திர போராட்ட தியாகிகள்/ முன்னால் ராணுவத்தினர் பற்றியும் அவர்களுக்கான அரசாங்கச்சலுகைகள் மற்றும் அதிலுள்ள அவலங்கள் பற்றிய தொகுப்பு நேற்றைய நிகழ்ச்சி.
மலேயாவில் ஒரு கூட்டத்தில் சுபாஷ் சந்திரபோஸ் பேசுகையில் அவரது பேச்சால் ஈர்க்கப்பட்டு தனது ஆறு பவுன் வளையலை அவரிடத்தில் அன்பளிப்பாய் அளித்ததையும், தன்னையும் ராணுவத்தில் இணைத்துக்கொண்டதையும், தற்போதைய வாழ்க்கை சிரமங்களையும் 85 வயது மூதாட்டி விவரிக்க பார்வையாளர்கள் மற்றும் பங்கேற்ப்பாளர்கள் முகங்களில் உணர்ச்சிக் கலவைகள்… நிகழ்ச்சியின் இறுதியில் பரிசு பெற்றபோது அவர் அடித்த அந்த சல்யூட்…….. அவருக்கு ஒரு ராயல் சல்யூட்.