அவரும் நானும்

பல்லிவாலில் தொடங்கி முதலைவாலில் முடியும் பெரும் பட்டியல் தமிழ் புத்தக வகைமையில் உண்டு.

1) : இந்த புத்தகம் சுயசரிதைக்கான வடிவை, இலக்கணத்தை கொண்டிருக்கிறதா?

2) : அவரைப்பற்றிதான் எல்லாம் தெரியுமே? இந்த புத்தகத்துல அப்படி என்னத்த இதுவரைக்கும் நாம கேள்விப்பட்டிறாத தகவல் இருந்துவிடப்போகுது?அனேகரும் இரண்டாம் கேள்வியை மனதில் எழுப்பிக்கொண்ட பிறகே, இந்த புத்தகத்தை படிக்க ஆரம்பிப்பார்கள்.

இதற்கான பதிலை முன்னுரையிலேயே குறிப்பிட்டிருக்கிறார் நூலாசிரியர்.முதல் கேள்விக்கு வருவோம்….

“ஏண்ணே… கலைஞர் தனிப்பேச்சில உங்ககிட்ட சொன்னத எதுக்கு பொதுவெளியில போட்டு உடைக்கிறீங்க? நீங்க அக்மார்க் வைஷ்ணவர்ன்னு எல்லாரும் நினைச்சிக்கிட்டு இருக்காங்க. இப்படி நீங்களே சொன்னீங்கன்னா , உங்கள பத்தி என்ன நினைப்பாங்க…?

அருகிலிருந்தபடி அங்கலாய்த்த நண்பரிடம் கவிஞர் வாலி சொன்ன வார்த்தைகள்…

“யோவ்…. சுயசரித எழுதனும்னு முடிவு பண்ணிட்டா.. அப்புறம் அதுல உள்ளும் புறமும் பாக்க கூடாது. உள்ளதை உள்ளபடி சொல்லிரனும்…”

”விரால்மீன் சாப்பிடும் பிராமின்…” என்று குறிப்பிட்டு தனி அவை ஒன்றில், கலைஞர் தன்னை கிண்டல் செய்ததை, ஒரு பொதுமேடையில் சொல்லி அரங்கத்தை சிரிப்பிலும் அவரின் நண்பரை மேலே சொன்ன அங்கலாய்ப்பிற்க்கும் ஆளாக்கியவர் வாலி.

“என்னை உங்கள் சகோதரி போல நினைத்து என்னிடம் உங்கள் வாழ்க்கையில் நடந்த அனுபவங்களைப் பேசுங்கள். நான் அதை தொடராக வெளியிடுகிறேன்” என்று குமுதம் சிநேகிதி ஆசிரியர் லோகநாயகி அவர்களால் 2010 ஏப்ரலில் போடப்பட்ட விதை ஆறு வருடங்கள் விருட்சமாய் வளர்ந்து உயிர்மை பதிப்பகத்தின் மூலம் “அவரும் நானும்” என்னும் ஆவணமாய் உருவாகியிருக்கிறது.

உப்பரிகை பார்வையை தவிர்த்து,உக்கிராண அறையிலிருந்து எழுதப்பட்டிருக்கும் சுயசரிதை.

நாமறிந்த கலைஞரை,தளபதியை,கோபாலபுரத்து குடும்பத்தை,உள்ளிருந்து ஒருவர் வாசல் நோக்கி பார்க்கையில் காணும் சம்பவங்களின் நீட்சியே இந்த புத்தகம்.இதை சொல்லலாமா? இதனை சொல்லுவதன் மூலம் குடும்பத்திற்க்கோ, கட்சிக்கோ, தலைவருக்கோ, தளபதிக்கோ ஏதேனும் சங்கடங்கள் நேருமோ? என்றெல்லாம் யோசிக்காமல் சுயசரிதை ஒன்றிற்க்கான வடிவ ஒருங்கை, சம்பவங்களை,விவரணைகளை மிகச்சரியாக கையாண்டு இருக்கிறார்.

உதாரணத்துக்கு இரண்டு சம்பவங்கள்.

ஒன்று :
தளபதி குறிஞ்சிமலர் தொலைக்காட்சி தொடரில் நடித்துக்கொண்டிருந்த சமயம், அவர் பெயரிட்டு ஒரு காதல் கடிதம் வீட்டிற்க்கு வருகிறது. முதல் கடிதத்தை புறந்தள்ளிவிட்டாலும், அடுத்தடுத்து கடிதங்கள் வர ஆரம்பிக்கவே, விசயம் தளபதி தம்பதியர் தாண்டி வீட்டிற்க்கும் தெரிய ஆரம்பிக்க, அதை எழுதியவர் யார் என்று கண்டுபிடிக்கப்பட்டு, கடிதம் எழுதியவரிடம் முரசொலி செல்வம் முன்னிலையில் விசாரணை ஆரம்பிக்கிறது.|

விசாரணையின் முடிவில் கடிதம் எழுதியவர் தளபதியை தான் அடிக்கடி சந்தித்து பேசுவதாக குறிப்பிடுகிறார்.இதனை கேட்டதும் கோபம் கொள்ளவேண்டிய துர்க்கா ஸ்டாலின் சந்தோசமடைகிறார்.கடிதம் எழுதிய நபர், தளபதியை கோபாலத்து வீட்டிற்க்கு எதிரே உள்ள கிருஷ்ணன் கோவிலில் சந்தித்து பேசியதாக சொன்னதே சந்தோசத்துக்கு காரணம்.தான் தினந்தோறும் சென்றுவரும் கோவிலுக்கு ஒருநாளும் தளபதி வந்ததில்லை என்பதும், வரப்பில்வதில்லை என்பதும் தனக்கு உறுதியாக தெரியும் என்பதால், அந்த நபர் கூறியது உண்மையல்ல என்றும், கடிதம் எழுதியவர் மருத்துவ சிகிச்சையில் இருப்பவர் என்பது அந்த நபரின் அண்ணன் மூலம் தெரியவந்ததும்பிரச்சினை முடிவுக்கு வருகிறது.

இரண்டு :
தனது மகள் செந்தாமரையை சமரீசன் அவர்கள் விரும்பிய காலகட்டத்தில் அது குறித்து தளபதி குடும்பத்தாரிடம் பேசுவதற்க்கு சபரீசன் அவருடைய உறவினர் ஒருவரை அணுக, விவரத்தை கேட்டதும், அந்த உறவினரோ பதறிப்போய்

“யாரு வீட்டு பொண்ணை போயி காதலிக்கிறே…? நீ உசிரோட இருக்கணும்னு ஆசை இல்லையா என்ன?”
என்று பதறியது.

சின்னதாய் சாந்து பொட்டு வைத்துக்கொண்டு , திருவெண்காட்டில் சாந்தமாய் இருந்துகொண்டிருந்த சாந்தா, கோபாலபுரத்து குலமகளாக, குங்கும திலகமிட்டு துர்க்காவாக மாறும் தருணத்தை, குட்டை கை பிளவுஸ் முழுக்கையாய் மாறிய காரணத்தை, தன் கணவரின் விருப்பத்தை நிறைவேற்றிய பெருமித்தோடு, ஆசையாய் விவரித்திருக்கிறார்.

மிக இயல்பாய் அருகில் அமர்ந்து கதைகேட்கும் தொனியில் உரையாடல்களை கையாண்டிருக்கிறார்.திருமணம் முடிந்து முதல் முதலாய் எக்மோர் ரயில்வே ஸ்டேஷனில் வந்திறங்கியது. கணவர் குழந்தைகளோடு நெருக்கியடித்துக்கொண்டு ஸ்கூட்டரில் படம் பார்க்க சென்றது.இப்போது அப்படி முடியுமா என்று தனக்குதானே ஏக்கத்தோடு கேட்டுக்கொள்வது.

அழகிரியின் படுக்கையறையில் அவரின் மனைவி காந்தியோடு சேர்ந்து கிராமபோனில் பாட்டுகேட்கும்போது, ஒலித்தகடை உடைத்துவிட்டு , அழகிரியின் திட்டுக்கான பயந்துகொண்டு காத்திருந்தது.

தலைவருக்காக ஆட்டுக்கல்லில் கறியை மசித்து பிடித்துவைக்கும் கோலா உருண்டை.ஒவ்வொருவரையும் பெயர் சொல்லியழைத்து கலைஞர் விடைபெற்றுச்செல்லும் தருணத்திற்க்காக, கலைஞரின் ஒவ்வொரு வெளியூர் பயணத்தின் போதும், வீட்டு உறுப்பினர்கள் அனைவரும் அஞ்சுகத்தம்மாள் திருவுருவப்படத்தின் முன் கூடிநிற்தல்.

கலைஞர் கைதின்போது கோபாலபுரத்தில் நடந்த களேபரம், தன்னையும், தனது மகள் செந்தாமரையையும் அந்த சமயத்தில் போலீஸார் நடத்தியவிதம்.

தளபதி தன்னை பெண்பார்க்க வந்த தருணம்.உதயநிதியை கைக்குழந்தையாய் இருக்கையில்,திருவெண்காட்டிலிருந்து செம்பனார்கோவிலுக்கு மேற்கொண்ட கூண்டு வண்டி பயணம்.

தனது அத்தை தயாளு அம்மாளுவைப் போலவே சமையலறை தரையிலேயே அமர்ந்து சாப்பிடுவது. அழகிரியின் மனைவி காந்தியுடன் தோழமையோடு பழகியது.

இல்லற வாழ்க்கை துவங்க நாள் பார்க்கப்பட்டு அதுவரையில் திருமாளத்து அம்மா (தயாளு அம்மையாரின் அண்ணி) அருகாமையில் உறங்குகையில், அவர் அடிக்கடி எழுந்து இவர் அருகில் இருக்கிறாரா என்று கவனிப்பதை கண்டு அவரிடம் அதைப்பற்றி கேட்க “சின்ன வயசில்லையா? விஷயம் தெரியாம நீ பாட்டுக்கு உன் புருஷன் இருக்குற ரூமுக்கு போயிடக் கூடாதுன்னுதான் நான் கூடவே இருக்கேன்”னு அவர் பதில் சொன்னதை கேட்டு வெட்கப்பட்டு சிரித்தது…

.“ஏங்க நெடுஞ்செழியன் வந்திருக்கார்…” நாவலரின் வரவை பெயர்சொல்லி அறிவித்ததால் கணவரிடம் கன்னத்தில் வாங்கிய அறை.

தனது பள்ளிப்படிப்பில் ஆரம்பித்து, தனது பேரப்பிள்ளைகளின் பள்ளிவிழாக்களுக்கு சென்றுவருவது வரையிலான நீள்வட்டப்பாதை ஒன்றினை, அதனோடு ஒன்றியமைந்த பல்வேறு தருணங்களை, சந்தோசம்,துக்கம்,பிரிவு,சோகம்,இயலாமை என்று அனைத்து உணர்வுகளும் கலந்து, எந்தவிதமான பாசாங்குமின்றி அடுக்கிச்செல்லும் சுயசரிதை

தலைச்சங்காடு யோகேஸ்வரன் ராமநாதன்.

****************************************
புத்தகம் : அவரும் நானும
ஆசிரியர் : துர்க்கா ஸ்டாலின்
பதிப்பகம் : உயிர்மை

****************************************

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *